கேரளா மாநிலத்தில் டிசம்பர் 8-ஆம் தேதி சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். கடைசி தினமான நேற்று நிறைவு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்துனராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், “கேரள மக்களின் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை ஆகியவற்றால் எனக்கு இங்கு வருவதில் எப்போதும் மகிழ்ச்சிதான். குறிப்பாக கடவுளின் சொந்த நாடாக கேரளா இருப்பதால்தான், அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைத்துள்ளீர்கள்.






என்னைப் பொறுத்தவரை, மக்கள் பிளவுபட்டிருக்கும் நாட்டில் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கிய நோக்கம். உங்கள் அரசாங்கம், சிறந்த சிந்தனையாளர்கள், உங்கள் அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


மேலும், ” நம் நாட்டில் நமக்கு சொல்லப்படும் கதைகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு அந்த கதை தெரிந்திருந்தால் கூட அது பல்வேறு கோணங்களில் நமக்கு சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் 2 பேர் அத்துமீறி நுழைந்து புகை கக்கும் கருவிகள் வீசினர். இந்த சம்பவம் குறித்து நமக்கு பல்வேறு கோணங்களில் கதைகள் சொல்லப்படுகிறது. ஒருபுறம் இந்த சம்பவத்தில் 6 பேர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது, அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் சிலர் யார் முந்திக்கொண்டு ப்ரேக்கிங் செய்தி கொடுக்கிறார்கள் என்ற போட்டி நிலவுகிறது, மற்றொரு புறம் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குறை கூறுகின்றனர், மாறாக ஆளும் கட்சி, அந்த நபர்கள் எதிர்கட்சிகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் இருப்பதாக கூறுகின்றனர்.


இப்படி பல்வேறு கோணங்களில் கதைகள் நமக்கு சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த 6 பேர் போராட்டம் நடத்த தூண்டியது எது என்பது குறித்து சொல்லப்படுமா? நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பது குறித்து சொல்லப்படுமா? மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்னும் விளக்கம் அளிக்காமல் இருக்கிறார்களே? எவ்வளவு அவநம்பிக்கையானது என்று சொல்லப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.