உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவருமானவர் அதானி. கடந்த 10 ஆண்டுகளில் இவரது குழுமத்தின் வளர்ச்சியானது மிகப்பெரிய அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு அம்பானியின் நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தாலும், பின்னர் பழைய நிலைக்கு வந்தது.


ஐ.ஏ.என்.எஸ். குழுமத்தை வாங்கிய அதானி:


கடந்த சில ஆண்டுகளாக ஊடகத் துறையிலும் கால்தடம் பதித்து வரும் அதானி குழுமம் தற்போது ஏ.என்.ஐ., பி.டி.ஐ. போன்று ஆசியாவிலே மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். செய்தி முகமையின் 50.50 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை தங்கள் வசம் வாங்கியதன் மூலம் அந்த நிறுவனமே அதானி குழுமத்தின் வசம் சென்றுள்ளது.


அதானி குழுமத்தின் ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க்ஸ் இந்த பங்குகளை வாங்கியுள்ளது. இதன்பின்பு, ஐ.ஏ.என்.எஸ். நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடுகள் ஏ.எம்.ஜி. குழுமத்திற்கு கீழே செயல்படும். விரைவில் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்திற்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிககள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மிகப்பெரிய செய்தி முகமை:


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான தனியார் செய்தி நிறுவனத்தையும் அதானி குழுமம் வாங்கியது. தற்போது, ஆசியாவின் மிகப்பெரிய செய்தி முகமையான ஐ.ஏ.என்.எஸ். குழுமத்தையும் அதானி குழுமம் வாங்கியிருப்பது ஊடகத்துறையில் அதானி குழுமம் மிக வலுவாக கால்தடம் பதித்துள்ளது என்பதையே காட்டுகிறது.


ஐ.ஏ.என்.எஸ். குழுமமானது 1986ம் ஆண்டு கோபால் ராஜூ என்பவரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஐ.ஏ.என்.எஸ். இந்தியாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் இடையே செய்திகளை கொண்டு செல்லும் பாலமாக செயல்பட்டது. பின்னர், தங்களது முழு கவனத்தையும் இந்தியா பக்கம் செலுத்திய ஐ.ஏ.என்.எஸ். இந்தியாவில் இருந்து 24 மணி நேரமும் தெற்காசிய முழுவதும் செய்திகளை கொண்டு சேர்க்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, ஆசிய நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளையும் இந்தியாவிற்கு வழங்கும் முக்கிய பணிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய செய்தி முகமைகளில் ஐ.ஏ.என்.எஸ். ஒன்றாகும்.


ஊடகத்துறையிலும் ஆதிக்கம்:


இந்தியாவில் உள்ள முன்னணி செய்தி நிறுவனங்கள், முன்னணி செய்தி தொலைக்காட்சிகள், வலைதளங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஆகியோர் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்தின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல துறைகளும் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.


இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட சிறப்பு செய்தியாளர்களுடன் இயங்கி வரும் ஐ.ஏ.என்.எஸ். குழுமத்திற்கு இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் சிறப்பு செய்தியாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல துறைகளிலும் கால்தடம் பதித்துள்ள அதானி குழுமத்தினர் சமீபகாலமாக ஊடகத்துறையிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.