இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக திகழ்வது ரயில்வே போக்குவரத்து ஆகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ரயில் போக்குவரத்து நாட்டில் இன்றியமையாததாக திகழ்ந்து வருகிறது. வாகனங்களை இயக்குபவர்களை ஓட்டுனர்கள் என்று அழைப்பது போல, ரயில்களை இயக்குபவர்களை லோகோ பைலட் என்று அழைக்கப்படுகிறார்கள்.


ரத்தத்தில் ஆல்கஹால் அளவு:


ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயிலை ஓட்டிச் செல்லும் லோகோ பைலட் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமாக கருதப்படுகிறது. இதனால், அவர்களுக்கு ப்ரீதலைசர் ( breathalyzer) எனப்படும் சோதனை நடத்தப்படுகிறது.


இந்த சோதனையின்படி, லோகோ பைலட்களின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு பரிசோதிக்கப்படும். இந்த சோதனையில் அவர்கள் ரத்தத்தில் எந்தளவு ஆல்கஹால் உள்ளது என்பது கண்டறியப்படும். ஒரு நிமிடத்தில் நடக்கும் இந்த சோதனையில் நான்கு விதமான முடிவுகள் உள்ளது. ஜீரோ, தேர்ச்சி, எச்சரிக்கை மற்றும் தோல்வி ஆகும். இந்த தேர்வில் தோல்வி அடைபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதியாகும்.


1761 லோகோ பைலட்கள் தோல்வி:


இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அதிர்ச்சிகரமான பதில் ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ளார். அதாவது, ரயில்வே ஓட்டுனர்களான லோகோ பைலட்களுக்கு நடத்தப்பட்ட ப்ரீதலைசர் சோதனை தேர்வில் 1761 லோகோ பைலட்கள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வில் தோல்வி அடைந்த 1761 லோகோ பைலட்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


சுஷில்குமார் மோடி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், “ கடந்த 5 ஆண்டுகளில் 8 கோடியே 28 லட்சத்து 3 ஆயிரத்து 387 ப்ரீதலைசர் ( ரத்தத்தில் ஆல்கஹால் இருப்பதை கண்டறியும் சோதனை) நடத்தப்பட்டது. இதில், 1761 லோகோ பைலட்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களில் பயணிகள் ரயிலின் லோகோ பைலட்கள் 674 பேர், சரக்கு ரயில்களின் லோகோ பைல்கள் 1087 பேரும் ஆவார்கள். அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில் 521 பேர் இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் 12 பேர் மட்டுமே இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான பயணிகள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த சூழலில், 1761 லோகோ பைலட்கள் ரயிலை இயக்கும்போது மது அருந்தியிருந்தது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடக்காத வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


மேலும் படிக்க: சட்டப்பிரிவு 370.. ஊடக சுதந்திரம்.. மனம் திறந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன்


மேலும் படிக்க: குஜராத்தில் உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம்: அப்படி என்னென்ன சிறப்புகள் தெரியுமா? வாயை பிளப்பீங்க!