Unemployment : இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


வேலைவாய்ப்பின்மை அதிகம்


2023 ஏப்ரல் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 8.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மும்பையில் இயங்கும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையான (சிஎம்ஐஇ) அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியுள்ளார்.


கடந்த மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 8.11 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.4 சதவீதத்தில் இருந்து 8.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 7.47 சதவீதத்தில் இருந்து 7.34 சதவிதமாக குறைந்துள்ளதாக  இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய அதிகாரி தெரிவித்தார்.


மேலும், தொழிலாளர் சந்தை நிலைகளின் பங்களிப்பும்  39.8 சதவீதத்தில் இருந்து 41.98 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போன்று நடப்பாண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 38.57 சதவீதம் பேர் வேலை பெற்றுள்ளனர். 


கடந்த மாத நிலவரம்


கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி, அதிகபட்சமாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவீதமாகவும், குறைந்தபட்சம் சத்தீஸ்கரில் 0.8 சதவீதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் இருந்தது.


மாநில வாரியாக பார்க்கையில், ஹரியானாவில் அதிகபட்சமாக 26.8 சதவீதம் வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. இதற்கு அடுத்து, ராஜஸ்தானில் 26.4%, பீகாரில் 17.6%, ஜார்க்கண்ட 17.5%, ஒடிசா 2.6%, சிக்கிம் 20.7%, ஜம்மு காஷ்மீர் 23.1%.  பீகார் 17.6%, குஜராத் 15.9%, ஹிமாச்சல் பிரதேசம் 11.7%, உத்தர பிரதேசம் 5.5%, தெலங்கானா 5.2%, தமிழ்நாடு 3.4%, டெல்லி 9.7% வேலைவாய்ப்பின்மை நிலவியது குறிப்பிடத்தக்கது. 


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்தது. உலகளவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பலரும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வந்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிநீக்கங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையால் கூட நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Plane Crash: கலிபோர்னியா பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு..


Hollywood: போராட்டத்தில் ஈடுபடும் திரைப்பட எழுத்தாளர்கள்: ஒடிடி நிறுவனங்களுக்கு சவால்: காரணம் என்ன?


The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது: உளவுத்துறை எச்சரிக்கை