கலிபோர்னியா மலை விமான நிலையம் அருகே ஒற்றை எஞ்சின் – சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - காலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானத்தில் 3 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது பிக் பியர் என்ற பகுதி அருகே விமானம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது அந்த விமானம் நொறுங்கி விழுந்து கிடந்ததை கண்டனர். இந்த விபத்தில் அதில் பயணம் மேற்கொண்ட 3 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த விபத்தை பற்றிய அறிக்கையில், Beechcraft A36 (சிறிய ரக விமானம்) பிக் பியர் சிட்டி விமான நிலையத்திற்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பியர் விமான நிலையம், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே பிரபலமான ரிசார்ட் பகுதியான பிக் பியர் ஏரிக்கு அருகிலுள்ள சான் பெர்னார்டினோ மலைகளில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு கலிபோர்னியாவில் கடந்த 3 நாட்களில் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த சனிக்கிழமையன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில் அடர்ந்த மூடுபனிக்கு காரணத்தால் ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானது. செஸ்னா சி 172 என்ற சிறிய ரக விமானம் சனிக்கிழமை இரவு 8:45 மணியளவில் நகரின் மேற்குப் பகுதியில், 13 கிமீ தொலைவில் விபத்துக்குள்ளானது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விமானம் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.