'தி கேரளா ஸ்டோரி' படத்தை  தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில்   உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி” . இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் யோகிதா பிஹானி , சோனியா பாலானி, அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா, மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுதினம் (மே 5) தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. 


முன்னதாக  இந்த படத்தில் ட்ரெய்லரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதாக எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானபோது கடும் சர்ச்சைகளை கிளம்பியது. கேரள அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது. 


இதனிடையே இப்படத்தின் ட்ரெய்லர்  வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். மேலும் படத்தை வெளியிடக்கூடாது  என பலரும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


இதற்கிடையில் தி கேரளா ஸ்டோரி படத்தில் கேரள அரசுக்கு எதிரான கருத்துகள் எதுவும் கூறப்படவில்லை என்றும், எந்த காட்சியும் தரக்குறைவாக இருக்காது எனவும்  தயாரிப்பாளர் விபுல் ஷா தெரிவித்திருந்தார். மேலும்  இப்படம் தீவிரவாதிகளை குறிவைத்து எடுக்கப்பட்டதே தவிர, இஸ்லாமியர்களை குறிக்கவில்லை. எனவே கேரளா முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அதேசமயம் பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு தான் படத்தைத் இயக்கியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசிய பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் எனவும் இயக்குநர் சுதிப்தோ சென்  தெரிவித்திருந்தார். எதிர்ப்புகளுக்கு மத்தியில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின்சிறப்புக் காட்சியை பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)  நேற்று நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், “தி கேரளா ஸ்டோரி” படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியானால் கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதால் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.