தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை கோரிய  வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது. 


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை கோரிய மற்றொரு வழக்கையும் விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறு கூறியுள்ளது.


விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் இஸ்லாம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் ட்ரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஆகிய மொழிகளில் (நாளை) மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படம் இந்திய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி கேரளா ஸ்டோரிக்கு வலுக்கும் எதிர்ப்பு


இந்நிலையில்,தி கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் திரையிட்டால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த படம் குறித்து ஏற்கனவே பேசிய முதலமைச்சர் பிணராயி விஜயன், மதச்சார்பின்மை உள்ள கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்துள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இப்படத்துக்கு தடை விதிக்குமாறு கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.


திரைப்படங்கள் வழியாக பிரிவினை வாதத்தை தூண்டுவது நியாயமல்ல என்பது தான் இத்திரைப்பட விவகாரத்தில் பலரின் கருத்தாக  உள்ளது.  பொதுமக்கள் அரசியல் கட்சியினர் மத்தியில் கூட இப்படத்தித்திற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  கேரள மாநிலத்தில் மக்கள் மாத சார்பற்ற முறையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் ஒற்றுமையை சிதைக்கும் விதமாக இந்த திரைப்படத்தின் கரு அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.