துப்பாக்கியை காட்டி மிரட்டிய பெண் கைது:
மராட்டிய மாநிலம் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ் ஆக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர். இவரது பெற்றோர் திலீப் கேத்கர்- மனோரமா தம்பதியினர். இந்த நிலையில் பூஜா கேத்கரின் தாயார் மனோரமா கையில் துப்பாக்கியுடன் தன் ஊரில் உள்ள விவசாயிகளை மிரட்டியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அதுகுறித்த புகைப்படமும் எக்ஸ் தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாட் போலீசார் பூஜாவின் பெற்றோர் மீது விவசாயிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக பூஜா கேத்கரின் தாய் மனோரமாவை ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் பகுதியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரை புனே அழைத்து சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீதான புகார்கள்:
ஏற்கனவே பயிற்சி ஐஏஎஸ் மீது தொடர் புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீதும் விசாரணையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, பூஜா கேத்கர் தனக்கு சொந்தமான ஆடி சொகுசு காரில் மராட்டிய அரசு என்ற பலகையும், சிவப்பு விளக்கு பொருத்திய சைரனையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதோடு கூடுதல் ஆட்சியர் அஜய்மோர் இல்லாத போது அவரது அறையின் முன் பகுதியை பூஜா ஆக்கிரமித்து வைத்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தது. மேலும் இந்த புகார் தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியர் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதனையடுத்து பூஜா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புனேவிலிருந்து வாசிம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்தும் ஐ ஏ எஸ் பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளையும், ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டையும் அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனை ஒருநபர் குழுவை அமைத்து விசாரிக்க மத்திய அரசு நியமனம் செய்தது. அதனை தொடர்ந்து அவரிடம் விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில் அக்குழுவிடம் பூஜா சிவில் சர்வீஸ் தேர்விற்கு அளித்த தனது அனைத்து ஆவணங்களை சமர்பித்த நிலையில் அதனையும் அக்குழு ஆய்வு செய்து விசாரணையானது மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே பூஜா கேத்கர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பூஜா கேத்கரை மாவட்ட பயிற்சி திட்டத்தில் இருந்தும் மராட்டிய மாநில அரசு விடுவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீது ஏற்கனவே அடுக்கடுக்காக பல்வேறு புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது ஒரு புறம் விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில் அவரின் தாயார் உள்ளூர் விவசாயிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டும் புகைப்படம் வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.