ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ள குடூர் போலீசாருக்கு தமிழ்நாட்டில் இருந்து திருட்டு மொபைல் போன்களை கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குடூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் கடந்த சனிக்கிழமை இரவு ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை நிறுத்தி ஆந்திர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்தில் இருவர் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததை கண்டறிந்த போலீசார் உடனடியாக அவர்களை கீழே இறக்கி அவர்களை பரிசோதித்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பை முழுவதும் செல்போன்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 225க்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூபாய் 23.6 லட்சம் ஆகும்.
விசாரணையில் அவர்களது பெயர் 36 வயதான கிருஷ்ணா என்றும், 20 வயதான பவன் என்றும் தெரியவந்தது. மேற்கு கோதாவர மாவட்டத்தின் அகிவீடு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தங்களை கூலித்தொழிலாளி என்று கூறி சென்னை, எழும்பூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிவந்துள்ளனர். அங்கிருந்து திருடப்பட்ட மொபைல் போன்களை எடுத்துக்கொண்டு ஆந்திராவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பலருக்கு இது திருட்டு செல்போன் என தெரிந்தும், விலை குறைவாக இருப்பதால் வாங்கிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதேபோல திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதற்காக ஆந்திரா திரும்பியபோது போலீசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : Tamil Nadu rains: : கனமழையால் சில மாவட்டங்களில் ஸ்கூல், காலேஜ் லீவ்..! எந்தெந்த மாவட்டங்கள்.?
இவர்கள் இருவரும் திருட்டு செல்போன்களை யாரும் கண்டுபிடிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த செல்போன்களில் ஏற்கனவே இருந்த தகவல்கள் அனைத்தையும் பார்மட் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீது சென்னையிலும், கூடுரிலும் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதில் கிருஷ்ணா மீது மட்டும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு அந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Orange Alert : இந்த 14 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை! சென்னையில் மீண்டும் மழை.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்