தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழையின் தாக்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வீடுகளிலும், சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னைவாசிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக கனமழை வாய்ப்பு அதிகமுள்ள நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சி, நாகை, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




அதேபோல, கடந்த இரு தினங்களாக கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடலூர் மாவட்டத்திலும் மிகவும் கடுமையாக மழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்திலும் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 1-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக சில மாவட்டங்களில் மட்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்போல தண்ணீர் ஓடுகிறது. மேலும் பல வீடுகளுக்குள் புகுந்த மழைநீரையும் அகற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  பல பகுதிகளில் இன்னும் அந்த நீர் வடியாத காரணத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மக்கள் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மழைநீரை அகற்றும் பணியை நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




சென்னையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டுமின்றி அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைநகரில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கவும், இல்லாவிட்டால் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண