பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய துணை பிரதமருமான எல்.கே அத்வானியின் 94வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய அரசியலில் பாஜகவிற்கு ஒரு வடிவமும் வலிமையும் சேர்த்த பெருமை அத்வானிக்கு உண்டு. மேலும், நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு, சிவராஜ் சிங் சவுகான், பிஎஸ் எடுயூரப்பா, வசுந்தரா ராஜு, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற பாஜக தலைவர்களை உருவாக்கிய பெருமையும் இவரை சேரும். 

  


இன்றைய பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து மும்பையில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.


பாஜகவின் அடிப்படை அரசியல் சொல்லாட்சியை தீர்மானித்தவர்:


90களுக்கு முந்தைய காலங்களில், பாஜக என்பது மேல்தட்டு வர்க்கம் சார்ந்தவர்களின் அரசியலாக மட்டுமே பார்க்கப்பட்டது. பாஜக முன்னெடுத்த 'இந்துத்துவா' வாதத்தை விளிம்பு நிலையில் வாழும் பெருமளவு மக்களலால்  (ஒபிசி, எஸ்சி, எஸ்டி) புரிந்து கொள்ள முடியவில்லை. தென்மாநிலங்களிலும் அதனால் கால் ஊன்றமுடியவில்லை. உண்மையில், வடஇந்தியாவின் நகர்புற பிராமண-பனியா கட்சி என்றளவில் தான் பாஜக சொல்லப்பட்டுவந்ததாக அரசியல் ஆய்வறிஞர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா கூறுகிறார். 


 


90களில் நடைபெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகள் இந்திய அரசியலின் அடிப்படையை மாற்ற ஆரம்பித்தது. 'மண்டல்', 'மந்திர்', 'மார்கெட்' ஆகிய மூன்றின் தாக்கங்கள் பாஜகவை மீண்டும் எழுச்சி பெற வைத்தது. இந்திய அரசியலின் பெரிய முரண் என்னவென்றால், இந்த மூன்று நிகழ்வையும் முன்னெடுத்தது காங்கிரஸ். ஆனால், இதன் நன்மைகளை அதிகளவில் அறுவடை செய்தது பாஜக. அதற்கு, பெருமூளையாக இருந்தது எல்.கே அத்வானி.     


 அத்வானி ரத யாத்திரை: 


90களில் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் அரசியல் வருகையை ஒட்டுமொத்த தேசமே உற்றுநோக்கியது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமய பொருளாதார கொள்கை, பின்தங்கிய வகுப்பிகளின் வாழ்வில் முன்னேற்றங்கள் எற்படுத்துவதுடன், சாதி கட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் கருதப்பட்டது.


நாட்டின் மொத்த மக்கள் தொகையில், பெருமளவு இருக்கும் ஓபிசி (52%) மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்ககும் மண்டல் ஆணையக் குழுவுக்கு எதிரான பிரச்சாரத்தை 90களில் அத்வானி தீவிரமாக முன்னெடுத்தார். இது, இந்துகளை பிரிக்கும் முயற்சி என்றும், ஒபிசிக்களை அந்நியப்படுத்தும் முயற்சி என்றும் தெரிவித்தார். இதன் எதிர்வினையாக, தேசியளவில் இந்துக்களை ஒன்றிணைக்கும் அயோத்தி மந்தீர் அரசியலை பாஜக தீவிரப்படுத்தினார்.  



அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பாக 90களில் அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை இந்திய சமூகத்தில் ஆழ்ந்த சமூக-அரசியல் மாற்றங்களை முன்னெடுத்தது. அத்வானின் ரத யாத்திரை 'இஸ்லாம் எதிர்ப்பு அரசியல்' என்ற வரையறைக்குள் சுருக்கி விட முடியாது. ராம் ஜன்மபூமி போராட்டத்திற்குப் பிறகு தான் வடமாநிலங்களில் ஒபிசி, தலித் வகுப்புகள் பாஜகவை நோக்கி செல்ல ஆரம்பித்தன. இதன் உளவியல் காரணங்களை அறிந்து கொள்வது முக்கியமானதாகும். இந்துத்துவா தன்னிச்சையாக செயல்பதுவதன் தொடக்கமாக அது அமைந்தது. 


ரத யாத்திரைக்குப் பின்புதான் 'இந்துத்துவா' சிந்தாந்தத்தை உள்ளூர் மட்ட அளவில் பேசத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகத் தான், மேவார் பிரதாப் சிங், சுவாமி விவேகானந்தா, ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் வரிசையில் அம்பேத்கார், பிர்சா முண்டா, சுகல்தேவ் மகாராஜா (Maharaja Suheldev) ஆகியோரைக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.  


உலகில் எந்தச் சொல்லாடலுமே நூற்றுக்கு நூறு முழுமையானதல்ல. அவற்றில் ஆதிக்க சக்தி மிகுதியாக இருக்கும்; அல்லது குறைவாக இருக்கும் ("There are No absolute 'True' Discourses, Only More or Less Powerful ones) என்று மிஷேல் ஃபூக்கோ குறிப்பிடுவார். இந்த வாதம், இன்று பிறந்தநாள் கொண்டாடும் எல்.கே.அத்வானியின் ரத யாத்திரைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமாக அமையும்.