போர்ப்ஸ் இந்தியா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றின்படி, உலகம் முழுவதும் உள்ள பெரு நகரங்களோடு ஒப்பிடுகையில், இந்தியத் தலைநகரான புது டெல்லி மற்ற பெரு நகரங்களை விட அதிக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான நகரங்களான ஷாங்காய், நியூ யார்க், லண்டன் ஆகியவற்றை விட அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், லண்டன் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மூன்றாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய நகரமான மும்பை இந்த வரிசையில் 18வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஒரு சதுர மைல் இடைவெளியில் சராசரியாக எத்தனை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் இந்தத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 150 பெரு நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் முடிவுகளில், டெல்லியில் ஒரு சதுர மைல் இடைவெளியில் 1826 சிசிடிவி கேமராக்கள் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்திலுள்ள லண்டனில் ஒரு சதுர மைல் இடைவெளியில் 1138 சிசிடிவி கேமராக்களும், மூன்றாம் இடம் பெற்றுள்ள சென்னையில் ஒரு சதுர மைல் இடைவெளியில் 610 சிசிடி கேமராக்களும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. 18வது இடத்தைப் பெற்றுள்ள மும்பை நகரத்தின் ஒரு சதுர மைலுக்கு 157 சிசிடிவி கேமராக்கள் பொது இடங்களில் மாட்டப்பட்டிருக்கின்றன.
டெல்லி பல்வேறு சீன நகரங்களை விட அதிகளவிலான சிசிடிவி கேமராக்களைக் கொண்டுள்ளது. சிங்கப்பூரின் 387 கேமராக்களும், நியூ யார்க்கில் 193 கேமராக்களும், மாஸ்கோவில் 210 கேமராக்களும் உள்ளன.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலிடம் பிடித்திருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “டெல்லி உலகின் பெரிய நகரங்களான ஷாங்காய், நியூ யார்க், லண்டன் ஆகியவற்றை விட, ஒரு சதுர மைல் இடைவெளியில் சராசரியாக அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளது என்ற செய்தியைப் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். இதுபோன்ற பெரிய ப்ராஜக்ட்களில் பணியாற்றி, குறைந்த நேரத்தில் சாதனை படைத்திருக்கும் டெல்லி அரசு அதிகாரிகளுக்கும், பொறியியலாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிசையில் டாப் 20 நகரங்களுள் இந்திய நகரங்கள் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன = டெல்லி, சென்னை, மும்பை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் SurfShark என்ற VPN நிறுவனம் இதே போன்ற ஆய்வை எடுத்தது. அதில், உலகிலேயே அதிக அளவிலான சிசிடிவி கண்காணிப்பு சென்னையில் நிகழ்வதாகவும், சென்னையில் ஒரு சதுர கிலோமீட்டர் இடைவெளியில் 657 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த வரிசையில் இரண்டால் இடம் ஹைதராபாத் நகரத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் டெல்லி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 289 சிசிடிவி கேமராக்களுடன் எட்டாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.