கடலூர் மாவட்ட பள்ளி வேன் விபத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் தாமதமாக ஏன் இந்த இரங்கல் செய்தி என்று விஜயை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Continues below advertisement

பள்ளி வேன் விபத்து:

கடலூரில் சிதம்பரம் அடுத்த செம்மங்குப்பத்தில் இன்று பயணிகள் ரயில் மீது பள்ளி வேன் மோதிய சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காலையிலே நிகழ்ந்த இந்த கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காலையில் நடந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். 

Continues below advertisement

 விஜய் இரங்கல்:

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த விபத்து குறித்து இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

விபத்து நடந்து 8 மணி நேரத்துக்கு பின்பு இரங்கல் செய்தியை விஜய் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இவ்வளவு தாமதமாக ஏன் இந்த பதிவு என்றும் சிலர் மத்திய அரசிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்