உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் வழக்கு விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, நகைத் திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணை செய்தது. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று, தாக்கி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு நேரில் ஆஜரான அஜித்தின் சகோதரர் நவீன்குமார், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
அவர் பேசுகையில்...,” அரசு தரப்பில் தனக்கு வழங்கப்பட்ட அரசு வேலை, மடப்புரத்தில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் சென்று பார்க்கும் வகையில் உள்ளது. மேலும் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா திருப்புவனம் பகுதியில் இருந்து வெகு தொலைவில் காட்டுப் பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை. சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது திருப்திதான். விரைவாக அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். தனிப்படை காவலர்கள் மட்டுமல்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.