சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தரையில் மென்மையாக இறங்கி, சரித்திர வெற்றி படைத்துள்ளது. இந்த சூழலில், இந்திய தேசத்துக்கும் அறிவியல் உலகத்துக்கும் என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?
இதுகுறித்து மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ABP Nadu-க்குப் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.
திட்டம் வெற்றி அடைந்த நிலையில், நமக்கு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?
சந்திரயான் 2 ஆர்பிட்டரில் Remote Sensing Instrument உள்ளது. இதைக் கொண்டு நிலவின் தரைப் பகுதியில் உள்ள தாதுப் பொருட்கள், கனிமங்கள் என்னென்ன இருக்கிறது என்று கண்டறியலாம். அப்படித்தான் கண்டறிந்து கொண்டிருக்கிறோம். எனினும் அதை 100 கி.மீ. தொலைவில் இருந்துதான் அறிய முடியும்.
உதாரணத்துக்கு நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். பிரியாணி வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கைத் துளைக்கிறது. யார் வீட்டிலோ பிரியாணி செய்கிறார்கள் போல என்று நினைப்பீர்கள். ஆனால் அது வீட்டில் செய்யும் பிரியாணியாக இருக்கலாம், அல்லது வாங்கி வந்த பிரியாணி பொட்டலமாக இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல், பிரியாணி போன்ற வாசமாக மட்டுமே இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதே நிலைதான் இதில்தான்.
Ground Closing என்று இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில், நிலவில் சந்திரயான் 2 ஆர்பிட்டரின் ஆராய்ச்சி முடிவுகள், சந்திரயான் 3 ரோவரின் முடிவுகளோடு ஒத்துப்போனால், நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படும்.
ரோவர் பிரக்ஞான் மூலம் எதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்?
நிலவில் தாதுப் பொருட்களும் கனிமங்களும் உள்ளனவா? இருந்தால் அவை எப்படி இருக்கின்றன? என்று கண்டுபிடிப்பது சந்திரயான் 3 ரோவரின் பணி.
லேண்டரில் மேலும் சில கருவிகள் உள்ளன. அவை கீழ்க்காணும் கண்டுபிடிப்புகளைச் செய்யும்.
* பூமியில் நில நடுக்கம் வருவதைப் போல, நிலாவிலும் அவ்வப்போது நிலநடுக்கம் வரும். அந்த நிலா நடுக்கத்தை, குறிப்பாக தென் துருவத்தில் ஏற்படும் நடுக்கங்களை லேண்டர் ஆராய்ச்சி செய்யும்.
* லேண்டரின் தலையில் கண்ணாடி இருக்கும் (Reflector). பூமியில் இருந்து விஞ்ஞானிகள் லேசர் ஒளியைச் செலுத்தினால், அது லேண்டரின் ரிஃப்ளெக்டரில் பட்டு, பூமிக்கே திரும்பி வரும். அவ்வாறு போய்விட்டுத் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு, பூமிக்கும் நிலவுக்குமான சரியான தூரத்தை அறிய முடியும். ஏற்கெனவே அவ்வாறு கணக்கிட்டுதான், பூமியில் இருந்து ஆண்டுதோறும் 3 செ.மீ. தூர அளவுக்கு நிலா விலகிச் செல்வதை அறிந்திருக்கிறோம்.
* இதன்மூலம் நிலாவின் இயக்கம் குறித்து தகவல்களைத் துல்லியமாக அறிய முடியும். நிலவைத் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க முடியும்.
* நிலவின் தரைப் பரப்பில் பிளாஸ்மா எப்படி உருவாகிறது? எப்படிப் பிரிகிறது என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
* நிலவுடைய மண்ணின் வெப்பக் கடத்துத் தன்மை எப்படி இருக்கிறது என்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
எவ்வளவு நாட்கள் நிலவில் ஆராய்ச்சி நடைபெறும்?
திட்டமிட்டபடி தரையிறங்கிய நிலையில், சந்திரயான் விக்ரம் லேண்டர் 14 நாட்கள் ஆய்வு செய்யும். ஏனெனில் அவ்வளவு நாட்கள்தான் சூரிய ஒளி இருக்கும். அடுத்த 14 நாட்கள் கடும் இருள் சூழ்ந்திருக்கும். அப்போது, சுமார் - 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அங்கு நிலவும்.
14 நாட்கள் கழித்து மீண்டும் ஆய்வு மேற்கொள்ள முடியாதா?
இருள் சூழ்ந்திருக்கும் காலத்தில் கருவிகள் அனைத்தும் கடுமையாக நொறுங்கிவிட வாய்ப்புண்டு. ஏனெனில் வெப்பத்தில் உலோகம் விரிவடையும் என்பதைப்போல குளிரில் சுருங்கும். அதேபோல மின்னணு சிப்புகள் குளிரால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதையும் தாண்டி சந்திரயான் ரோவர் செயல்பட்டால், அது நிச்சயம் வரலாற்றுச் சாதனைதான்.
இவ்வாறு மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ நிலவை நோக்கிய இந்தியாவின் பிரக்ஞான் (அறிவாற்றல்) ரோவர் மேலும் விரிவடைந்து உள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாக மாறி உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Chandrayaan EXCLUSIVE: சந்திரயான் 3 தரையிறக்கம்; பரபர 17 நிமிடங்கள் எப்படி இருக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பிரத்யேகப் பேட்டி!
Chandrayaan 3 Landing LIVE: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்.. உடனடி அப்டேட்ஸ் இங்கே...