ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான விவகாரம்:


அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் மணிஷ் திவாரி, "சுதந்திரத்திற்குப் பிறகு, நாங்கள் குடியரசைக் கட்டியெழுப்பி வந்ததால் அரசியலமைப்பு உத்தரவாதங்கள் மூலம் இந்தியா தனது எல்லையை நிர்வகிக்க முடிவு செய்தது.


இதன் அடிப்படையில்தான், ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தும் வகையிலான சட்டப்பிரிவு 370, வடகிழக்கு மாநிலங்களுக்கு பொருந்தும் வகையிலான சட்டப்பிரிவு 371, அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை ஆகியவை இந்த விஷயத்தில் பொருத்தமானதாகிறது" என வாதம் முன்வைத்தார்.


வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்படுகிறதா?


மணிப்பூர் இனக்கலவரத்தை மேற்கோள் காட்டி பேசிய மணிஷ் திவாரி, "இந்தியாவின் எல்லையில் ஒரு சிறிய அசம்பாவிதம் நடைபெற்றாலும் அது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்" என்றார்.


மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வாதத்திற்கு கடுமையான எதிர்வினையாற்றினார். "சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிக ஏற்பாடு. இதற்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.


வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் எந்த சட்டப் பிரிவையும் தொடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இந்த வாதம் தவறானது. எந்த அச்சமும் இல்லை, அச்சத்தை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்றார்.


மத்திய அரசு தரப்பின் இந்த வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "ஜம்மு, காஷ்மீர் தொடர்பான வாதத்தை மட்டும் முன்வையுங்கள்" என மணிஷ் திவாரியிடம் கூறினார்.


தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "மத்திய அரசின் இந்த வாதம், அனைத்து விதமான அச்சத்தையும் போக்க வேண்டும். 370ஆவது பிரிவைக் கையாள்வதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் தலையிட மாட்டோம்" எனக் கூறினார்.


காஷ்மீர் திறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளளனர்.