சந்திரயான் 3 திட்டத்தின் மூலம், விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்த சென்றுள்ளது இந்தியா. அந்த வகையில், சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கி இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டம் மூலம் இந்தியா அடைந்துள்ள சாதனையை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்திருந்தாலும், திட்டத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் யார் என்பது பலருக்குத் தெரியாது.
சந்திராயன் - 3க்கு மூளையாக செயல்பட்ட வீரமுத்துவேல்:
இஸ்ரோ விஞ்ஞானி பி. வீரமுத்துவேலின் முயற்சியில்தான் இந்தத் திட்டம் உருவானது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் கோலோச்சி வரும் நிலையில், அந்த பட்டியலில் வீரமுத்துவேலும் இணைந்துள்ளார். இவரை பற்றி கீழே காண்போம்.
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தமிழ்நாட்டின் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியாக உயர்ந்தவர். தற்போது, சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக உள்ளார்.
சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்யாதது இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், சந்திரயான் திட்ட இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு வீரமுத்துவேல் கொண்டு வரப்பட்டார்.
உலக நாடுகளை மிரள வைக்கும் தமிழன்:
சந்திரயான் திட்டத்தின் இயக்குநராக உள்ள வீரமுத்துவேல், அதற்கு முன்பு பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, சந்திரயான் 2 திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். இதில், நாசாவை ஒருங்கிணைத்து அதன் விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றினார். இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராக பணியாற்றியவர். விண்வெளி தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் பெயர் பெற்றவர்.
சவால்களை சரித்திரமாக மாற்றுமா இஸ்ரோ?
சந்திரயான் - 2க்கு செய்யப்பட்டதை காட்டிலும் கூடுதலான சோதனைகளுக்கு சந்திரயான் - 3 உட்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல், சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டது. தன்னாட்சி விமானங்கள், ஹெலிகாப்டர் விமானங்கள், கிரேன்-மோட் தரையிறங்கும் சோதனைகள், டிராப் சோதனைகள், சாப்ட்வேர் சோதனைகள் ஆகியவற்றின் மூலம், சாத்தியமான தோல்விகள் மற்றும் மீட்பது ஆகியவை தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது.
தோல்விகளுக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு, அதற்கான தீர்வுகளுடன் சந்திரயான் - 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டதால் இந்த முறை நிச்சயம் நிலவை எட்டுவோம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
சந்திராயன் - 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவால் துவண்டுவிடாத இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தோல்வி கற்றுக்கொடுத்த படிப்பினையை கொண்டு சந்திரயான் - 3 விண்கலத்தை வடிவமைத்து வெற்றி கண்டுள்ளது. இந்த முறை நிலவை எட்டிப்பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், புதிய விண்கலத்தில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.
லேண்டர் கருவியான விக்ரமில் எந்தவித பிரச்னையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அது மிகவும் வலிமையானதாக வடிவமைக்கப்பட்டது. அதன்படி, லேண்டரின் கால்கள் வலுவானதாகவும், மிகவும் உறுதியானதாகவும், அதிக தரையிறங்கும் வேகத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டது.