நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம், கடந்த மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்டது. 40 நாட்கள் பயண திட்டத்தின்படி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள,  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கப்பட உள்ளது.


வரலாற்று தருணத்தை நோக்கி இந்தியா:


இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக தற்போதுள்ள 25 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்களில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.


தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.


உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள சந்திரயான் 3 தரையிறக்கத்தை தென்னாப்பிரிக்காவில் இருந்து
காணொளி காட்சி வாயிலாக பார்க்கவிருக்கிறார் பிரதமர் மோடி. 15ஆவது பிரிக்ஸ் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க் சென்றுள்ளார்.


சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் பிரதமர்:


இதுவரை, மூன்று நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துள்ளது. அமெரிக்க, சோவியத் ஒன்றியம் (தற்போது ரஷியா), சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து அந்த பட்டியலில் இந்தியா இணையுமா என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


சந்திரயான் 3-இன் தரையிறக்கம் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் யூடியூப், எக்ஸ் (முன்பாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தரையிறக்கத்தின் போது பார்வையாளர்கள் நேரடி வர்ணனை மற்றும் நிபுணர்களின் பகுப்பாய்வு ஆகியவற்றை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்காவில் மோடி:


தரையிறக்கத்தின் லைவ் ஸ்ட்ரீமிங் சுமார் 17:27 IST (மாலை 5:27 மணிக்கு) தொடங்கும். அதேபோல, தரையிறக்கம் மாலை 6:04 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியும், நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை வழங்குகிறது. NASA TV செயலியும் Space.com இணையதளமும் நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்கிறது.


முன்னதாக, ஜோகன்னஸ்பர்க் சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் பால் மஷாடைல், வாட்டர்குளூஃப் விமானப்படை தளத்தில் மோடியை வரவேற்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் தரையிறங்கும்போது அவரைச் சந்திப்பதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கு பெரிய எண்ணிக்கையில் கூடியிருந்தனர்.