இமாச்சலப்பிரதேசத்தில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்ட இந்தியாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அதன் வரலாறு, சுற்றுலாதலங்கள், வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்து, தங்கள் சுற்றுலாவை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றிக் கொள்கிறார். 


மத்திய, மாநில அரசுகளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்து தருகிறது. இதனிடையே இமாச்சலப்பிரதேசத்தில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரிட்டன் நாட்டின்  நோர்விச் நகரைச் சேர்ந்த பிரவுன் இவான் டெனிஸ் என்ற 71 வயது நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளார். 


அவர் ஏப்ரல் 2 ஆம் தேதி சம்பா மாவட்டத்தில் உள்ள டல்ஹவுசிக்கு அருகிலுள்ள பைகுந்த் நகரில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். மார்ச் 31 ஆம் தேதி டல்ஹவுசிக்கு வந்த பிரவுன் இவான் டெனிஸ்  தலைமையிலான குழுவினர் ஏப்ரல் 2 ஆம் தேதி தர்மசாலா திட்டமிட்டிருந்தனர். சம்பவ தினத்தன்று பிரவுன் இவான் டெனிஸ் புகைப்படம் எடுக்க அங்கிருந்த கட்டடத்தின் கூரையின் மீது ஏறியுள்ளார்.  அப்போது அங்கு மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்சார கம்பிகளை கவனிக்காமல் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். 


அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்க சம்பவ இடத்திலேயே பிரவுன் இவான் டெனிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டல்ஹவுசி துணைக் கண்காணிப்பாளர்  ஹேமந்த் தாக்கூர் கூறுகையில், காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், உடலை கைப்பற்றிய நிலையில் பிரிட்டன் தூதரகத்திற்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்சார வாரியம் உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றவில்லை என்றும், கடந்த மாதம் கூட இரண்டு தொழிலாளர்கள் இதுபோன்று தான் மின் விபத்தில் சிக்கிய நிலையில் அருகிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Video Viral : மெட்ரோ ஸ்டேஷனுக்கு கவர்ச்சி உடையில் வந்த பெண்.. நிர்வாகம் கொடுத்த அறிவிப்பு.. நடந்தது என்ன?