ஆடை சுதந்திரம் தேவைதான். ஆனால் சிறு குழந்தை முதல் வயதான நபர் வரை பயணிக்கும் ஒரு பொது போக்குவரத்து வாகனத்தில் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் வருவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று சொல்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த செய்தியைப் படிக்கவும். இது உங்களுக்குள் இன்னும் இன்னும் விமர்சனங்களை வெளிக்கொணரும்.
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு ஃபேஷன் இன்ஃப்ளுயன்சர் அரைகுறை ஆடையில் பயணித்தார். அவர் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பேக் பேக்குடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் இடுப்பில் ஒரு பிகினி மட்டும் அணிந்திருந்தது தெரியவந்தது. சுற்றியிருந்தவர்கள் பலரும் கண்டும் காணாமலும் இருந்தனர். சிலர் இவர் ஜாவேத் ஊர்ஃபியோ என நினைத்து உற்றுப் பார்த்தனர்.
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது தொடங்கி பாலிவுட்டின் ஃபேஷன் சென்சேஷனாக தற்போது வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார். நடிகை ராக்கி சாவந்துக்குப் பிறகு பாலிவுட்டில் உச்சபட்ச கவர்ச்சியால் கவனமீர்த்து வருபவராக உர்ஃபி ஜாவேத் உருவெடுத்துள்ளார். அந்த ரேஞ்சுக்கு இந்தப் பெண்மணியும் தாராளமாக கவர்ச்சியில் வந்திருந்தாலேயே ஒரு நிமிடம் பயணிகள் எல்லோரும் இவரை உர்ஃபி ஜாவேத் என்று நினைத்துவிட்டனர்.
இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வழக்கம் போல் நெட்டிசன்கள் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பி வருகின்றனர். ஒரு பதிவர், "இது ஜனநாயகம். சுதந்திரத்திற்கான உரிமை" என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பதிவர் அப்பாவிபோல், "டெல்லி மெட்ரோ ரயிலில் ஏதேனும் படப்பிடிப்பா?" என்று வினவியுள்ளார்.
மற்றொரு நபர் கொஞ்சம் கிண்டலாக "இவர் தான் டார்சான் கேர்ள்" என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த நபர் கொஞ்சம் சட்டம் தெரிந்தவர் போல, "இவர் ஆடை அணிந்திருக்கும் விதம் இந்திய தண்டனைச் சட்டம் 294A வின் படி வழக்கு பதியத்தக்கது. இந்தப் பெண் இந்த ஆடையுடன் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைய சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வீரர்கள் எப்படி அனுமதித்தனர்?" என்று வினவியுள்ளார்,
ஒரு ட்விட்டர்வாசி, "ஐய்யோ பாவம், ஏழைப் பெண் போல. யாரேனும் துணி வாங்கிக் கொடுக்கவும்" என்று வன்மத்துடன் பேசியிருக்கிறார்.
ஒரு பதிவர், "அவர் அருகில் இருந்த பெண்ணின் நிலையையும், சுற்றியிருந்த ஆண்களின் மனநிலையையும் யோசித்துப் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.
"மெட்ரோ ஏசி வேலை செய்யவில்லை போல!" என்று ஒரு நபர் கூறியிருக்கிறார்.
இப்படி பலரும் பல வகையில் கருத்துகளைத் தெரிவித்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த சம்பவம் டெல்லி மெட்ரோவில் தான் நடந்தது என்று உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையில் டெல்லி மெட்ரோ ரயில் முதன்மை செயல் இயக்குநர் அனுஜ் தயார் கூறுகையில், "டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக அந்தஸ்தைப் பேணும் வகையில் கண்ணியமான ஆடை அணிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆடைகள் மூலம் சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி மெட்ரோ ரயில் ஆப்பரேஷன்ஸ் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59ன் கீழ் அநாகரிகமான ஆடை குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.