Breaking LIVE: தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்பெட்டி தடம்புரண்டது.
அறிக்கை வந்தபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வண்டலூர் பூங்காவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.39,680 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ.4,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், நவம்பர் 18ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நவ.20ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் கீழ் செயல்படும் 2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும்
மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருச்சி உஜ்ஜீவநாதர் கோயில் நிலங்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் நாளை மறுநாள் (நவ.18) வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் விமான நிலைய ஓடுபாதை பராமரிப்பு பணி மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று 2ஆவது நாளாக சீ விஜில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
கடலோரப் பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த சீ விஜில் ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
கால் அகற்றப்பட்டதால் உயிரிழந்த கால் பந்து வீராங்கனை பிரியாவின் உடல் கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு காரணமாக பிரியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின் அவரது கால் முன்னதாக அகற்றப்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு பிரியா உயிரிழந்தார்.
இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 19ஆம் தேதி தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.
சென்னையில் வழித்தடம் மாறி வேறு பகுதி, சாலைகளில் மாநகரப் பேருந்துகளை இயக்கக்கூடாது எனவும், ஓட்டுநர், நடத்துநரின் பல்வேறு வகையான ஒழுங்கீனங்களால் வருவாய் இழப்பும் அவப்பெயரும் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மாத மண்டல பூஜையை முன்னிட்டு இன்று மாலை முதல் கோயிலில் நடை திறக்கப்படவிருக்கிறது.
உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்,
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ.16) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், நாளை (நவ.17) முதல் 19ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் மிதமான வானிலை (காற்றின் வேகம் மணிக்கு 40-45 கிமீ முதல் 55 கிமீ வரை) நிலவும் எனவும், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 179வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
இனி எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையா..?
கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.
இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும்.
இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டிற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -