தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து தென்கொரியாவின் முவான் நகரத்திற்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாங்காக் நகரத்தில் இருந்து முவான் நகரத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று சென்றது.
175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம்:
மொத்தம் 175 பயணிகளுடன் அந்த விமானம் சென்றது. அதில் விமான குழுவினர் 6 பேர் இருந்தனர். இந்த நிலையில், முவான் நகரத்தில் தரையிறங்கியபோது விமானம் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்துச் சிதறியது. தற்போது வெளியான தகவலின்படி, இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ:
தென்கொரியாவின் செய்தி நிறுவனங்கள் தற்போது வெளியிட்ட தகவலின்படி, தற்போது வரை இந்த விபத்தில் குறைந்தது 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பாங்காக் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஜேஜு ஏர் ப்ளைட் என்ற விமானம் புறப்பட்டு வந்தது.
இந்த விமானம் முவான் நகரத்தில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, தரையில் உராய்ந்தபடியே சென்ற விமானம், ஓடுதளத்தில் இருந்து விலகி விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் நோக்கி ஓடியது.
உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:
அப்போது, சுற்றுச்சுவரில் அதிவேகத்தில் விமானம் மோதியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறியது. விமானம் முழுவதும் வெடித்து தீ மளமளவென எரிந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.
உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை சுமார் 28 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் வெடித்துச் சிதறியதைப் பார்க்கும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்தில் 175 பயணிகளுடன் விமானக்குழுவினர் 6 பேரும் இருந்தனர். இந்த விமானத்தில் இந்தியர்கள் யாரேனும் பயணித்தனரா? என்று தெரியவில்லை. இந்த கோரமான விமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? தொழில்நுட்பக் கோளாறா? விமானியின் கோளாறா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து காரணமாக ஒட்டுமொத்த தென்கொரியாவும் சோகத்தில் மூழ்கியுள்ளது. காயம் அடைந்து மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.