இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல சுழற்பந்துவீச்சாளருமான அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடர் மூலமாக அவர் ஆட உள்ளார்.
ஓய்வுக்கு பிறகு பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் இவரை நேர்காணல் செய்திருப்பார். அதில், ஜெய்ஸ்வாலுக்கும் அவருக்கும் இடையேயான உறவு பற்றி பேசியிருப்பார்.
ஜெய்ஸ்வால் - அஸ்வின்:
"ஜெய்ஸ்வாலுக்கும் எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் பாண்ட். நான் முதன்முதலில் ஆர்.ஆர். அணியில் சேர்ந்தேன். அந்த பையன் ரொம்ப டேலண்ட். கிரிக்கெட் விளையாடும்போது நிறைய பேரு அதைப் பேச மாட்டாங்க. பால் புதுசா இருக்கும்போது த்ரோ தரையில் அடிக்கக்கூடாது. அப்போதான் பால் ஸ்விங் ஆகும்.
இரண்டு பால் ஸ்விங் ஆனா கூட, ஆட்டம் மாறிடும். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் தெரியாமல் கிரிக்கெட்டர்கள் நிறைய பேர் வர்றாங்க. அதற்கு காரணம், அவர்கள் வாழ்க்கையில சரியான ஆட்களை அவர்கள் சந்திக்கவில்லை. அந்த மாதிரி வந்த பையன் அவன். ஆனா, பாக்கும்போதே தெரியும். ப்பா.. என்னமா ஆட்றான்?
சிறு குழந்தை போல அழுத ஜெய்ஸ்வால்:
நாலு பேருக்கு பயத்தை உண்டு பண்ணப்போறான். உலகத்துல ஒரு பெரிய ஆளா வர்றதுக்கு வாய்ப்பு இருக்குது. அவனுக்கு ஒரு பசி இருந்துச்சு. ஒரு தடவை இப்படிதான் பண்ணனும்னு சொன்னிட்டோம்னா, எதையாவது பண்ணி அதை பண்ணுவான். உழைப்பான். உழைப்புக்கு அஞ்சமாட்டான்.
ராஜாமணி ட்ரெயினிங் பண்ணுவாங்க. அப்போ ஃபாரின் ப்ளேயர்ஸ், இந்தியன் ப்ளேயர்ஸ் மிங்கிள் ஆவாங்க. அப்போ பெரும்பாலும் ஒரு சின்ன உரசல் சில நேரம் இருக்கும். அந்த மாதிரி ஒரு உரசல் நடக்கும்போது நான் போயி நின்னேன். அவன் என்ன குறைவா உனக்குத் தெரியுறான்? அந்த மாதிரி எல்லாம் பேசாதனு ஒரு வாட்டி கேட்டேன். அதுல இருந்து கூடவே போயி நிக்குறது. தப்பு பண்ணா சொல்லித்தர்றது. அவனுக்கு திடீர்னு அழுகை வந்துடுச்சு. அதைப் பாக்கும்போது நமக்கு கொஞ்சம் கஷ்டம் ஆகிடுச்சு. சின்னக்குழந்தை மாதிரி அழுறானேனு. "
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ஜெய்ஸ்வால். அவரது சிறப்பான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார்.
ஜெய்ஸ்வால் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை பானிப்பூரி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த கடையில் பணியாற்றிக் கொண்டே கிரிக்கெட் பயிற்சி செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.