Breaking News Live: இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி 4 பேர் பலி!

Breaking Live :தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Jun 2022 09:21 PM
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி 4 பேர் பலி!

அறந்தாங்கி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.


மீமிசலில் இருந்து தொண்டி நோக்கி சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும், ஒருவர் சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்தனர்.

அரசு, டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

மதுரையை சேர்ந்த ரங்கம்மாள் என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதில், காவல்துறை சித்திரவதையால் தன் மகன் தற்கொலை செய்துகொண்டதாக தாய் தொடர்ந்த வழக்கில் அரசு, டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

Breaking News Live: சென்னை தி.நகரில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணம் உயர்வு

சென்னை தி.நகரில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 4 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 60 ரூபாயும், 2 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படும்.

Breaking News Live: சென்னை காசிமேட்டில் 4 மீனவர்கள் மாயம்

சென்னை காசிமேட்டில் மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

Breaking News Live: செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழ்நாட்டுக்கு பெருமை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும், இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு துறையில் தமிழகம் முன்னேறி வருவதாகவும், தமிழக விளையாட்டுத்துறை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Breaking News Live: எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு..!

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தலைமையிலான 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து அணி மாறியுள்ளனர். இதன்மூலம் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுக்கும் முடிவுக்கு மொத்தமுள்ள 2665 பேரில் 2,432 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்தது!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,765  ஆக விற்பனையாகிறது.

Breaking News Live: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ...அச்சத்தில் பொதுமக்கள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,34,18, 839 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9,486 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 4,27,97,092 ஆக தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். பலி எண்ணிக்கை 27 அதிகரித்து மொத்தம் 5,25,047 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு 96,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை முகக்கவசம் அணிந்து பொது இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

Breaking News Live: சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம்

சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

Breaking News Live: உலகளவில் 54.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

உலகளவில் தற்போது வரை 54.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

Breaking News Live: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு  நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.

Breaking News Live: பிரதமர் மோடி இன்று ஐக்கிய அமீரகத்திற்கு சுற்றுப்பயணம்

ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Breaking News Live: ஜி7 மாநாட்டில் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கனடா பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Breaking News Live: முதலமைச்சர் இன்று வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.

Background

தமிழகத்தில் பெட்ரோல்,  டீசல் விலையில் 38வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 38வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 


அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருட்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையை குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்:


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில பொருட்களான மறைமுக வரி விகிதமும் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.