2025ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் மோடி குறிப்பிடுகையில், "விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில்  மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.


மத்திய அமைச்சரவை கூட்டம் அதிரடி முடிவு:


2025ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.


விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இன்று முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.


"விவசாயிகள் நலனே முக்கியம்"


பி&கே உரங்களுக்கான மானியம் இன்று முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலனை உறுதியாக வைத்திருப்பதில் தொடர்ந்து முன்னுரிமை அளித்து, டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை மாற்றாமல் வைத்திருப்பதில் மத்திய அரசு விவசாயிகளுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது.


 






புவிசார் அரசியல் தடைகள் மற்றும் உலகளாவிய சந்தை நிலைமைகளின் நிலையற்ற தன்மை இருந்தபோதும், 2024-25 கரீஃப் மற்றும் ரபி பருவங்களுக்கு மலிவு விலையில் விவசாயிகளுக்கு டிஏபி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உகந்த அணுகுமுறையை அரசு கடைப்பிடித்தது.


இதையும் படிக்க: ‘திமுகவிற்கு தேதி குறிக்கணும்’ - பணியை தொடங்கிய அன்புமணி! அமாவாசை சென்டிமென்ட் ..!