Breaking News Tamil LIVE: கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் சரோஜா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை, வருடத்திற்கு மூன்று முறை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை களைந்து, கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்ற வழக்கில் இடைத்தரகர் மாலதிக்கு ஒருநாள் போலீஸ் காவல்
அரக்கோணம் மற்றும் அதன சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மங்கம்மாபேட்டை,ஜோதி நகர், சுவால் பேட்டை, எஸ்.ஆர்.கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சலில் இருந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகள் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தியதால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளது.
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பூங்கா அமைந்துள்ள இடம் தொடர்பான விசாரணை,நில நிர்வாக ஆணையர் முன்பு நிலுவையில் உள்ள நிலையில், நோட்டீஸ் அனுப்பியது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்தின் மூலம் தீயுடன் விளையாடுகிறீர்கள் - ராகுல் காந்தி
அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு தடைகோரிய வழக்கை வரும் ஜூலை 22-ந் தேதி ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவை நிராகரிக்க கோரி தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடுத்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு தடை விதிக்கப்போவதாக வெளியான தகவல் வதந்தி என்று முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் புதியதாக 20 மகளிர் காவல்நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி வருகிறார்.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சிப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்துள்ள நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Background
வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு / செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசிக்க ஒபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டப்பட்டது.
ஒற்றைத் தலைமை முழக்கம் – கொளுத்திப் போட்ட மாதவரம் மூர்த்தி
பொதுக்குழு தொடர்பாகவும் அதில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுப்பப்பட்டதும் அரங்கம் பரபரப்பானது. முதலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி எழுந்து, அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதனை இடை மறித்த ஒபிஎஸ் ஆதரவாளர்களாக கருதப்படும் மனோஜ்பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் இருவரும், இப்போது இது தேவையில்லாத ஒன்று, இது தொடர்பாக பின்னர் பேசிக்கொள்ளலாம் என சொல்லியும் கேட்காத மூர்த்தி, ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும் அதுதான் கட்சிக்கு நல்லது. யார் ஒற்றைத் தலைமையாக இருக்க வேண்டும் என்பது உங்கள் இருவருக்குமே தெரியும் என பேசியிருக்கிறார்.
மாதவரம் மூர்த்திக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்பி கோ.ஹரி, குமரகுரு, அருண்மொழித்தேவன் உள்ளிட்டோரும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மூர்த்தி சொல்வது சரிதான் என பேச, அவர்களின் கருத்துக்கு கூட்டத்தில் ஆதரவு பெருகியிருக்கிறது.
கொந்தளித்த ஜேசிடி பிரபாகர் – அமைதிப்படுத்திய வைத்திலிங்கம்
பொதுக்குழு தொடர்பாக பேச வேண்டும் என்று கூட்டத்தை கூட்டிவிட்டு, இப்படி சம்பந்தம் இல்லாமல் ஒற்றைத் தலைமை பற்றி பேசுவது திட்டமிட்டு செய்வதா ? இல்லை யாரை அவமரியாதை செய்ய முயற்சிக்கின்றீர்கள் என சீறியிருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிக்க, கூட்டத்தில் சலசலப்பு அதிகம் ஆகியிருக்கிறது. உடனே தலையிட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அவர்களை சமாதானம் செய்திருக்கிறார்.
ஒற்றைத் தலைமை குறித்து கருத்து தெரிவித்த செங்கோட்டையன்
ஒற்றைத் தலைமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து காரசாரமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், எழுந்த மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையின் இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று பேசி, அவரும் ஒற்றைத் தலைமை கோரிக்கைக்கு நெய் ஊற்றியிருக்கிறார்.
கீழே குனிந்துக்கொண்ட கேபி.முனுசாமி
நிர்வாகிகள் பலரும் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி ஆவேசமாக பேசியபோதும், சிலர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோதும் எல்லா கூட்டங்களில் கருத்து சொல்லும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் கருத்துச் சொல்லாமல் தலையை கீழே குனிந்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
ஒற்றைத் தலைமை – சட்டம் பேசிய சிவி சண்முகம்
இப்போது ஒற்றைத் தலைமையாக ஒருவரை தேர்ந்தெடுக்க முடியுமா ? அதற்கு சட்டத்தில் வழிவகை இருக்கிறதா என ஒரு நிர்வாகி கேட்க, அதற்கு பதிலளித்து பேசிய அதிமுக எம்.பி. சிவி சண்முகம், அதெல்லாம் எளிதாக செய்துவிடலாம் என அவர் பங்கிற்கும் ஒற்றைத் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார்.
மவுனமான ஒபிஎஸ் – முடிவு செய்கிறோம் என்ற ஈபிஎஸ்
கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ஒபிஎஸ் மணியன் உள்பட பலரும் ஒற்றைத் தலைமையை கருத்தை ஆதரித்து பேச, எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்த ஒபிஎஸ் கூட்டம் முடியும் வரையில் எதுவுமே பேசாமல் அமைதியாய் அமர்ந்திருக்கிறார். இறுதியாக, பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமை குறித்து நாங்கள் பேசி முடிவு செய்கிறோம் என்று கூறி கூட்டத்தை முடித்திருக்கிறார்.
4 மணி நேரம் நடந்த கூட்டம் – ஒரு மணி நேரத்தில் அறிக்கை
காலை 11 மணிக்கு தொடங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம், ஒற்றைத் தலைமை சர்ச்சையால் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி வரை கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்திருக்கிறது. ஆனால், காலை 11.57 மணிக்கே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொதுக்குழுவை எப்படி நடத்துவது என்பது குறித்தும் என்னென்ன தீர்மானங்கள் கொண்டுவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.
ஓரங்கட்டப்படும் ஒபிஎஸ் – கட்டுப்படுத்தும் எடப்பாடி பழனிசாமி
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் தவிர பெரும்பாலன நிர்வாகிகள் ஒற்றைத் தலைமை அதிமுகவிற்கு வேண்டும் என்றும், அதில் சிலர் நேரடியாக எடப்பாடி பழனிசாமியே அதிமுகவிற்கு தலைமையேற்கவேண்டும் என்று பேசியது ஒபிஎஸ்-சை கடும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இந்த கூட்டமே தன்னை ஓரங்கட்டவும் ஒற்றைத் தலைமையை உருவாக்கவும் எடப்பாடி பழனிசாமியால் கூட்டப்பட்ட கூட்டம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் ஒபிஎஸ். கட்சியை தான் மட்டுமே ஆள வேண்டும் என்று எடப்பாடி நினைத்து காய்களை சாமர்த்தியமாக நகர்த்திவருகிறார் என்றும் பேசியிருக்கிறார்.
ஒற்றைத் தலைமை இப்போது சாத்தியமா ? – அதிமுக விதிகள் சொல்வது என்ன ?
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அதற்கான ஒப்புதலை வரும் 23 ஆம் தேதி வாங்க வேண்டியிருக்கிறது. அதோடு, ஒற்றைத் தலைமை உருவாக்க வேண்டுமென்றால், ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் மட்டுமே ஒற்றைத் தலைமை உருவாக்கம் என்பது சாத்தியப்படும்.
சம்மதிப்பாரா ? சமாளிப்பாரா ஒபிஎஸ் ?
தன்னை ஓரங்கட்டும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எடுத்தாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து தான் ஒருபோதும் விலகமாட்டேன் என்ற உறுதியில் இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஏனென்றால், ஒபிஎஸ் ராஜினாமா செய்யாமல் ஒற்றைத் தலைமையை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
வேட்பாளர்கள் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் என்று கட்சி சார்ந்த அனைத்து முடிவுகளிலும் அறிவிப்புகளிலும் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ ஒபிஎஸ் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். அதனால், இப்போதைக்கு ஒற்றைத் தலைமை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது.
ஆனால், எல்லா கூட்டங்களிலும் ஒபிஎஸ்-சை அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்டால், அவரே வெளியே சென்றுவிடுவார் அல்லது வேறுவிதமான முடிவை எடுப்பார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கணக்குபோடுகின்றனர். அந்த கணக்குகளை நிகழ்கால பரதனாக அவரது ஆதரவாளர்களால் பார்க்கப்படும் ஒபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பார்க்க வேண்டும்.
சசிகலாவுக்கு ’தூது’ விடும் ஒபிஎஸ்
ஒரு கட்டத்தில் தன்னால் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தரப்பையும் சமாளிக்க முடியாதப்பட்சத்தில் சசிகலாவிடம் சரணடைந்துவிடலாம் என்ற முடிவையும் ஒபிஎஸ் எடுத்து வைத்து, அதற்கான தூதையும் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்கிறார்கள். சசிகலாவும் இதுபோன்ற ஒரு சூழலுக்காகவே காத்திருக்கிறார்.
பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமா ?
எது எப்படியோ வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிச்சயம் பிரச்னை வெடிக்கும் என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏற்கனவே, நடத்தி முடிக்கப்பட்ட உட்கட்சி தேர்தலுக்கு ஒப்புதல் பெறுவது முதல் தீர்மானமாக போடப்பட்டு, திமுகவிற்கு கண்டம் தெரிவித்தும், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சபதமேற்கும் மற்றொரு தீர்மானமும் போடப்படவிருக்கிறது.
அதோடு, சேர்த்து ‘ஒற்றைத் தலைமை’ வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டால், அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அடுத்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் வியூகம் வகுத்திருப்பதாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
எடப்பாடி பழனிசாமியா – சசிகலாவா ?
இறுதியாக, அதிமுவில் ஒற்றைத் தலைமை ஏற்பட்டால் அது தற்போதைய சூழல்படி எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாவும், ஒபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்தை தொடங்கி சசிகலாவுடன் சென்று இணைந்தால், அவருக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஏனென்றால், சசிகலாவை அவரது சமூகத்தையும் தவிர்த்துவிட்டு தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவால் வெற்றி பெற்றுவிட முடியாது என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும் – ஒபிஎஸ்க்கும் தெரியும்.
அதே நேரத்தில் இந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை என்பது வழக்கம்போல எழுந்து, வழக்கம்போல அடங்கிவிடும் என்றும் கணிக்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -