தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்த நிலையில், சர்ச்சை வெடித்துள்ளது.
குரூப் 2, 2 ஏ தேர்வு
மாநிலம் முழுவதும் குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள 2,327 பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் நேற்று முன்தினம் (பிப்.8) நடைபெற்றன.
முன்னதாக, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை .
21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டி
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான நிலையில், முதன்மைத் தேர்வு பிப்.8ஆம் தேதி நடந்தது. முற்பகலில் நடந்த இரண்டாம் தாளில் பொது அறிவு மற்றும் பொதுத் திறனறிவுத் தேர்வுகள் நடைபெற்றன. பிற்பகலில் முதல் தாளான தமிழ் மொழி தகுதித் தேர்வு நடைபெற்றது. இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
இதில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று 88ஆவதாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கான விடைகளாக, பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா? மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன.
வெடித்த சர்ச்சை
இதற்கு நெட்டிசன்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் பதிவில் ஒரு பதிவர் தனது பதிவில், ’’TNPSC குரூப் 2A தேர்வில் தமிழ்நாட்டில் முதல்வரை தாயுமானவர் என்று அழைக்கக் காரணமான திட்டம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வுகள் என்பது தேர்வு எழுதுபவர்களின் அடிப்படைத் திறன்களைக் கண்டறியவா அல்லது திராவிட மாடலை விளம்பரப்படுத்தவா என்பது மிகப்பெரும் சந்தேகம்.
முதல்வரை திருப்திப்படுத்தவா?
இது போன்ற கேள்விகளால் முதல்வரை திருப்திப்படுத்த வேண்டுமென்று தேர்வு ஆணையம் நினைக்கிறதா? அல்லது இது போன்ற கேள்விகளை அரசே கட்டாயமாக்கி இருக்கிறதா? இனி வரும் தேர்வுகளில் முதல்வர் அல்வா சாப்பிட்ட கடையின் பெயர் என்ன என்பது கேள்வியாக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
இது போன்ற கேலிக் கூத்து விளம்பரங்களால் நிர்வாக சீர்கேடுகள் மறைந்து விடுவதில்லை என்பதை அறிவால் உணர்ந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளைக் கைவிட்டு தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த அரசு முயலுமா என்பது சந்தேகமே!’’ என்று சாடி உள்ளார்.