சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
”எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வி”
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதியிடம், அதிமுகவில் செங்கோட்டையனால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி 11 தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், இத்தனை முறை தோல்விகளை சந்தித்த ஒரே தலைவர் அவராகத்தான் இருக்கும் என்று விமர்சித்தார்.
”அதிமுகவை வழிநடத்தும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை”
மேலும், இதிலிருந்தே, அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது நிரூபணமாகியிருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதோடு, அதிமுகவில் இருக்கும் தலைவர்கள் வெறுப்போடுதான் அங்கு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக பாஜகவை எதிர்ப்பார், ஆனால் மறைமுகமாக அவர்கள் கொண்டுவரும் திட்டங்களை ஆதரிப்பார் எனவும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.
”கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இபிஎஸ் படாத பாடு படுகிறார்”
அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதே சந்தேகமாக இருப்பதாகவும், அக்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் பேசுவதை பார்த்தாலே அது தெரிவதாகவும் குறிப்பிட்டார். மேலும், தன்னுடைய கட்சியை கட்டுப்படுக்குள் கொண்டுவருவதற்கே எடப்பாடி பழனிசாமி படாத பாடு பட்டுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி விளாசினார்.