Breaking Tamil LIVE:மேட்டுப்பாளையத்தில் வாகனப் பேரணி; தேர்தல் நடத்தையை மீறிய எல்.முருகன் மீது வழக்கு பதிவு!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை முழுவதும் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குபதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்படும் பணிகள் தொடங்கியது.
நேற்று வரை ரூ.173 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக வரும் 85+ வயது முதியோருக்கு பேருந்து வசதி இலவசம். பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வழிகாட்டலுக்கு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆவணங்களைக் காட்டி வாக்குப்பதிவு செய்யலாம். - சத்யபிரதா சாஹு
காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தநிலையில், விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தொடங்கியது.
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை காங்கிரஸ், பா.ஜ.க வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. இதற்கிடையில், பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்வும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 21-ஆம் தேதி, ஜார்க்கண்டில் நடைபெறவிருக்கும் இந்தியா கூட்டணி பேரணியில், பஞ்சாப் முதல்வரும், அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும் பங்கேற்பதாக தகவல்.
துபாய் மழைவெள்ளத்துக்கும் கிளவுட் சீடிங் முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதீதமான மழை கணிக்கப்பட்டதுதான்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் ஷெனாய் நகர் இடையே மெட்ரோ ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
6-வது நாளாக கொண்டாடப்பட்ட சித்திரைத் திருவிழா.. மீனாட்சி அம்மன் கோவிலின் நேற்று நடந்த சித்திரை திருவிழா வைபவக் காட்சிகள்
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 91 கன அடியில் இருந்து 2 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.62 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 21.535 டிஎம்சியாக உள்ளது.
Mansoor Ali Khan : தன்னுடைய உடல்நிலை குறித்து மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை திரையுலகினர், அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு மோர் குடுத்தாங்க... குடித்த உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்... மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல.
வலி அதிகமாகவும் சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ.ல அட்மிட் பண்ணி, இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் அத்தொகுதியில் தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தார். நேற்று பரப்புரையில் கடைசி நாள் என்பதால் மக்களிடம் வாக்கு சேகரித்து வந்த அவர், திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -சேலம் இடையே வழக்கமாக ரூ. 2,433 ஆக உள்ள விமான டிக்கெட் கட்டணம் ரூ. 5,572 ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கோவை விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,349 ல் இருந்து ரூ.8616 ஆக உயர்ந்துள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 1,168 திரைகளில் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற திமுக கவுன்சிலரிடமிருந்து ரூபாய் 12 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சி 31 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜவா என்ற ஜஹாங்கீர்.இவர் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் விநியோகம் செய்தபோது, அவரிடம் இருந்து ரூபாய் 12,500 வரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த இரு தினங்களில் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.64 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
தேர்தலில் வாக்களிக்க பணமும், பொருளும் கொடுப்பதும் பெறுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் அதனால் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணமோ, பொருளோ பெற வேண்டாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024ன் 32வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இன்று (ஏப்ரல் 18ம் தேதி) மகாராஜா யாத்வேந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சுமார் 10 வாகனங்களில் சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் கனமழையால் சென்னையில் இருந்து துபாய், குவைத், சார்ஜா செல்லும் விமானங்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து செல்லும் 12 விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் தேசிய, மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக இதில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன.
இப்படி அனல் பறக்கும் தேர்தல் களத்தில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். இதுவரை, பல கோடி மதிப்பிலான ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவை பறுமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை வாக்குப்பதிவு என்பதால் நேற்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது. மேலும் நாளை மக்கள் எந்த சிரமமும் இன்றி வாக்குப்பதிவு செய்ய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார்.
இப்படி பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகப்படியான வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து உடனுக்குடன் காணலாம்..
- - - - - - - - - Advertisement - - - - - - - - -