சமீப காலமாக, சுற்றுலாவாசிகள் அதிகம் சென்று வரும் பகுதியாக உள்ள லடாக்கில், இரண்டு பகுதிகளை தனக்கு சொந்தமான பகுதியாக சீனா அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.
சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய - சீன - பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்தது.
லடாக் யாருக்கு சொந்தம்?
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில், இருதரப்பில் பலி எண்ணிக்கை பதிவானது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேச விவகாரம் இரண்டு நாடுகளுக்கு இடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, லடாக்கிலும் சீனா தற்போது கை வைத்திருப்பது சர்வதேச அளவில் பூகம்பமாக வெடித்துள்ளது.
இரண்டு புதிய மாவட்டங்களை (County) சீன அரசு உருவாக்கியுள்ளது. அதற்கு He'an, Hekang என வடகிழக்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி பெயர் சூட்டியுள்ளது. இதற்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் மாநில கவுன்சிலும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் ஹோட்டன் மாகாணம் நிர்வகித்து வருகிறது.
சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை:
லடாக்கில் உள்ள இரண்டு பகுதிகளை தங்களுடைய பகுதி என சீனா அறிவித்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டவை லடாக்கின் கீழ் வருகின்றன. இந்தியப் பகுதியில் சட்டவிரோதமாக சீன ஆக்கிரமித்திருப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
சீனாவின் ஹோட்டான் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை அமைப்பது தொடர்பான அறிவிப்பைப் பார்த்தோம். புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டவற்றின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் இருக்கிறது. தூதரக வழிகளில் சீனத் தரப்பிற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்" என்றார்.