புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது திரையரங்குக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரசிகை ஒருவர் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


அல்லு அர்ஜுன் வழக்கு:


நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த சில நாட்கள் முன்பாக தெலங்கானா போலீஸால் கைது செய்யப்பட்டார். புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜுனை பார்க்க முண்டியடித்த கூட்டத்தில் ரேவதி என்கிற பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.



அல்லு அர்ஜுன்-க்கு கிடைத்தது ஜாமீன்:


கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது, ஹைதராபாத் போலீஸ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜுனை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி காவல்துறை கைது செய்தது.


ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்:


போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜுன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் கட்டுக்கு அடங்காத வகையில் கூடினர். நிலைமை கைமீறி போக, அங்கிருந்து வெளியேறும்படி கேட்டு கொண்ட பிறகும், காவல்துறை அதிகாரிகளுக்கு அல்லு அர்ஜுன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 


இதையடுத்து, அல்லு அர்ஜுனை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது தெலங்கானா உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அல்லு அர்ஜுனுக்கு ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது. 


இதுகுறித்து அல்லு அர்ஜுன் வழக்கறிஞர் அசோக் ரெட்டி கூறுகையில், "அவர் (அல்லு அர்ஜுன்) காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது (அல்லு அர்ஜுனுக்கு).


இதை அவர் தெரிந்தே செய்யவில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது. எனவே, நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்போம். உயர் நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21ஆம் தேதி" என்றார்.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்