டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டுத் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று செய்தி வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்புத் தெரிவித்து உள்ளது,
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆண்டு அட்டவணை சொன்னது என்ன?
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, 2, 4 தேர்வுகள் எப்போது என்பதற்கான உத்தேச ஆண்டு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அக்டோபர் 10ஆம் தேதி அன்று வெளியிட்டது.
இதன்படி, குரூப் 1 தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ஆம் தேதியும் குரூப் 2 தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிக்கை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தொழில்நுட்பத் தேர்வுகள் எப்போது?
ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு ( நேர்காணல் ) ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்றும் நேர்காணல் அல்லாத தேர்வுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதே ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தேர்வுகள், ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.
அதேபோல குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிக்கை ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. குரூப் VA தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தது.
ஆண்டுத் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியீடா?
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி 2025 ஆண்டுத் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று செய்தி வெளியானது, 15 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது. எனினும் இந்த செய்திக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்புத் தெரிவித்து உள்ளது,
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதாகவும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கோரிக்கை விடுத்துள்ளது.