பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்படப்போகிறார், தமிழிசை மீண்டும் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்போகிறார் என்ற பேச்சுக்கள் கமலாலய வட்டாரத்தில் கச்சைக் கட்டி பறந்துக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலையே 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை நீடிக்க வேண்டும் என்பதில் பாஜகவின் தேசிய தலைமை உறுதியாக இருக்கிறது.


அண்ணாமலைக்கு ஆதரவாக இருக்கும் தேசிய தலைமை


தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவரது அதிரடியான நடவடிக்கைகள், திமுக அமைச்சர்களுக்கு எதிராக புள்ளி விவரத்தோடு அவர் வைத்த பிரஸ்மீட்கள், அவரது பாத யாத்திரை உள்ளிட்ட அவரது செயல்பாடுகளால் பாஜகவிற்கு முன்னர் எப்போதும் இல்லாத பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக நம்பும் தேசிய தலைமை. 2026ஆம் தேதி ஆண்டு தேர்தல் வரையில் அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வதே சரியான நிலைபாடாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.


மீண்டும் அதிமுகவோடு கூட்டணியா?


இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியோடு இருக்கும் திமுகவை எதிர்த்து நிற்க பாஜகவோடு அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைப்பதே சரியாக இருக்கும் என்று பாஜக தேசிய தலைமை நினைப்பதாகவும், மத்திய உளவுத் துறையின் புள்ளி விவரங்களுடன் அதற்கான விவரங்கள் அண்ணாமலையிடம் தெரிவிக்கப்பட்டதற்கு பின்னரே, அதிமுக கூட்டணிக்கு வேண்டாம் என்ற தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து அவர் சற்று மனம் மாறியுள்ளார் என்று கூறப்படுகிறது.


அதற்கு எடுத்துக்காட்டாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டாவது நபராக கருதப்படும் நபர் குறித்து ‘யார் அந்த சார்?” என்ற போஸ்டரை ஏந்தி சென்னை மால்களில் அதிமுக ஐ.வி விங் நடத்திய புதிய வகை பிரச்சாரத்திற்கு நேரடியாக சமுக வலைதளம் மூலமாகவே ஆதரவு தெரிவித்தார் அண்ணாமலை. இது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு கூட ‘அதா பாராட்டிட்டாரே’ என்று பாசிட்டிவாக பதில் அளித்துச் சென்றார்.


இதனடிப்படையில், மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி குறித்த மறைமுக பேச்சுவார்த்தை சென்றுக்கொண்டிருப்பதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணிக்கு தேசிய தலைமையிடம் ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் வரையில் அவர் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.


தமிழிசை என்ன ஆவார்?


இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் எதிர்காலம் என்ன ? அவருக்கு என்னவிதமான பதவியை பாஜக தரப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அண்ணாமலை மாற்றப்பட்டு மீண்டும் தமிழிசையை மாநிலத் தலைவராக பாஜக  தேசிய தலைமை அறிவிக்கப்போகிறது என்ற தகவல்கள் எல்லாம் பரவும் நிலையில், பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டாவை டெல்லிக்கே சென்று சந்தித்து இருக்கிறார் தமிழிசை. பாஜக தலைவர் பதவிக்காக அவர் காய்நகர்த்தி வருகிறார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும்போது அவர் வேறு ஒரு பெரிய பதவியை பிடிக்க தூண்டில் போட்டுவருவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


என்ன பதவி கிடைக்கப்போகிறது தமிழிசைக்கு ?


பாஜக தேசிய தலைவரை சந்தித்த கையோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்கவிருக்கும் தமிழிசை தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆளுநர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்து தேர்தலையும் சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் தனக்கு அங்கீகாரம் இருகக் வேண்டுமென்றால் தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கி, கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சர் பொறுப்பை தனக்கு தர வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பாஜக தேசிய தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவரது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்கும் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.