இந்தியாவில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக மாறி இருக்கிறது. இதற்கு பொருளாதார வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பது, முறையான பொது போக்குவரத்து கட்டமைப்பு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
முன்னேறிய பெங்களூரு:
அதிலும், குறிப்பாக டிராபிக் அதிகம் இருக்கும் நகரங்கள் என எடுத்தால் அதில் பெங்களூருவை தவிர்க்கவே முடியாது. பீக் ஹவர்களில் அருகே இருக்கும் இடத்திற்கு செல்லக் கூட நீண்ட நேரம் டிராபிக்கில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக கடந்த ஆண்டு 2வது இடத்தில் இடத்தில் இருந்த பெங்களூரு இந்த ஆண்டு 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. 2023ஆம் ஆண்டிற்கான ஆய்வு பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டது. அதில், உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரமாக ஆறாவது இடத்தை இந்தியாவின் பெங்களூரு நகரம் பிடித்துள்ளது.
பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என்று ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவு கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிகையில் ஒரு நிமிடம் குறைவாகும்.
டாப் 10 நகரங்கள் என்ன?
கடந்த 2022ஆம் ஆண்டில் 29 நிமிடங்கள் 9 நொடிகள் என்று கணக்கிடப்பட்ட நிலையில், இந்தாண்டு ஒரு நிமிடம் குறைந்திருக்கிறது. இருப்பினும், வாகனப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரமாக பெங்களூரு உள்ளது.
மேலும், இந்த பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 14 கிலோ மீட்டர் மட்டுமே நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிக்க முடியும். அதே நேரத்தில், 10 கிலோ மீட்டர் பயணிக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த அளவு கடந்த ஆண்டை விட ஒரு நிமிடம் மட்டுமே குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 2வது இடத்தில் டப்பிள், 3வது இடத்தில் டொரண்டோ, 4வது இடத்தில் இத்தாலியின் மிலன், 5வது இடத்தில் லிமா, 6வது இடத்தில் பெங்களூரு, 7வது இடத்தில் புனே, 8வது இடத்தில் புக்கரெஸ்ட், 9வது இடத்தில் மணிலா, 10வது இடத்தில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஆண்டுக்கு ரூ.17,725 கோடி இழப்பு:
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் பெங்களூரு திகழ்கிறது. பெங்களூருவில் தினமும் 2000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சிக்னல்கள் நிறுத்தம், நேர இழப்பு, எரிபொருள் இழப்பு என பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு பெங்களூரு நகரம் ரூ.19,725 கோடி இழப்பை சந்திக்கிறது என்று நிபுணர்கள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க