Imran Khan: பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


முடிவுக்கு வருகிறதா இம்ரான் கானின் அரசியல் பயணம்?


பிரதமர் பதவியில் இருந்து விலகிய இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. பண மோசடி வழக்கிலும் ஊழல் வழக்கிலும் சிக்கி தற்போது ராவல்பிண்டி சிறையில் உள்ளார். இப்படிப்பட்ட சூழலில், வரும் 8ஆம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.  


ஆனால், ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால் தேர்தலில் போட்டியிட அவருக்கு பத்தாண்டுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இம்ரான் கான் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வருகிறது. அரசின் ரகசிய தகவல்களை கசியவிடப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு:


பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருள்களை சட்ட விரோதமாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனை மட்டும் இன்றி இருவருக்கும் தலா 5,00,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, திருமண சட்ட விதிகளை மீறிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஸ்ரா கானுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, விதிகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது.


இஸ்லாம மத விதிகளின்படி, முதல் திருமணம் முடிந்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகே இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது, 'இத்தாத்' என சொல்லப்படுகிறது. ஆனால், தனது முன்னாள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இம்ரான் கானை திருமணம் செய்த போது, 'இத்தாத்' விதிகளை புஸ்ரா கான் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், எந்த விதமான விதிகளையும் மீறவில்லை என இம்ரான் கானும், அவரது மனைவியும் விளக்கம் அளித்தனர்.


தேர்தல் பணிகள் தீவிரம்:


தேர்தலில் போட்டியிட தடை இருந்தும் இம்ரான் கான் சார்பில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும், ஜாமீனில் வெளிவருவது அவரது கட்சிக்கு பெரும் சாதகமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னதாக அதன் பரப்புரையை தீவிரப்படுத்த உதவும். 


தேர்தலில் இருந்து விலக்கி வைக்கவே பாகிஸ்தான் ராணுவம், தன்னை குறிவைப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இருப்பினும் ராணுவம் அதனை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.