விருந்தோம்பல் என்றாலே அதில் இந்தியர்களை அடித்துக்கொள்ளவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வரும் மருமகனுக்கும், மகளுக்கும் பெற்றோர்கள் தரும் விருந்து என்பது மறக்க முடியாத வகையில் இருக்கும். இதை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவார்கள்.
சங்கராந்தி விருந்து:
ஆந்திராவில் மறுவீட்டிற்கு வந்த தனது மகள் மற்றும் மருமகனுக்கு பெற்றோர்கள் அளித்த விருந்து தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ஆந்திராவைச் சேர்ந்தவர் தடாவர்தி பத்ரி. பிரபல தொழிலதிபரான இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் ஸ்ரீஹரிகா. ஆந்திராவின் பீமாவரம் நகரில் வசித்து வரும் பத்ரி மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.
இவர் சமீபத்தில் தனது மகள் ஸ்ரீஹரிகாவிற்கு சாவலா ப்ரித்விகுப்தா என்பவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல ஆந்திராவில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது ஊரில் திருமணமாகி சென்ற மகளுக்கு பெற்றோர்களால் பொங்கல் சீர் வழங்கப்படுவது போல, ஆந்திராவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது மகள் ஸ்ரீஹரிகா – மருமகன் பிரித்வி குப்தாவிற்கு பொங்கல் விருந்து வழங்க முடியாமல் பத்ரி – சந்தியா தம்பதியினர் தவித்துள்ளனர். நடப்பாண்டில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் பெரியளவில் இல்லாத காரணத்தால், நடப்பு மகர சங்கராந்தி பண்டிகையில் மகளுக்கும், மருமகனுக்கும் பொங்கல் விருந்து வைத்து அசத்தினர்.
இந்த விருந்தில் 173 வகையான உணவு வகைகளை செய்து அசத்தியுள்ளனர். இதற்காக, தொழிலதிபர் பத்ரியின் மனைவி சந்தியா கடந்த நான்கு நாட்களாக இந்த பலகாரங்களை செய்து வந்துள்ளார். அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளில் சாப்பாடுடன் பாஜி, பூரி, தயிர், அல்வா, அப்பளம், குளிர்பானம், கோலி சோடா ஆகியவற்றுடன் ஏராளமான விதவிதமான உணவுகள் இருந்தன. இந்த அனைத்து உணவுகளும் தங்களது மருமகனுக்காக செய்யப்பட்டதாக அவரது மாமியார் சந்தியா கூறினார்.
கொரோனாவால் சங்கராந்தி விருந்து தர முடியாமல் இருந்த நிலையில், தங்களது மகளுக்கும் மருமகனுக்கும் 173 வகையான உணவு வகைகளை பெற்றோர்கள் செய்து தந்து அசத்தியிருப்பது ஆந்திரா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது அவர்கள் பரிமாறிய 173 வகை உணவு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: ShareChat Lay Offs : தொடரும் பணிநீக்கங்கள்...500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஷேர்சாட்...அதிர்ச்சியில் ஊழியர்கள்...