Sabarimala : சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வரை கோயிலின் வருவாய் சுமார் ரூ.310.40 கோடியாக இருந்தது.


சபரிமலை


கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2022-2023ஆம் ஆண்டிற்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்த நிலையில், இந்த முறை அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 


நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவருக்கும் தேவசம் போர்டு சார்பில் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.


அதேசமயம் சன்னிதானம் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தரிசனம் செய்யும் பக்தர்களை உடனடியாக பக்தர்களை வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


உச்சம் தொட்ட வசூல்


கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் வருகை குறைந்து இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு பக்தர்களின் வருகையானது அதிகரித்துள்ளன. பக்தர்களின் வருகை அதிகரிக்க அதேசமயம் காணிக்கையின் மதிப்பும் அதிகரித்து வருகிறது. கோயில் நடை திறக்கப்பட்ட நாள் முதல் கடந்த 12ஆம் தேதி பக்தர்கள் செலுத்திய காணிக்கையானது ரூ.310.40 கோடி ஆகும்.


இதனை அடுத்து நேற்று வரை தினமும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இதன் காரணமாக நேற்று வரை கோயில் வருவாய் ரூ.315.46 கோடியாக இருக்கிறது என தேசவம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்களின் காணிக்கைகளை எண்ணுவதற்கு ஆறு சிறிய இயந்திரம் மற்றும் ஒரு பெரிய இயந்திரம் மூலம் எண்ணப்பட்டு வருகிறது. இதனை  அடுத்து நடப்பாண்டு சீசன் நாளை நிறைவடைய இருக்கிறது.


இன்று ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இன்று கடைசி நாள் என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் காணிக்கை வசூலும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் அதிகபட்ச வருவாய் ரூ.260 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.