ShareChat Lay Offs :  பிரபல சமூக ஊடகமான ஷேர்சாட் 20% பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


உலகெங்கும் கடந்தாண்டு முதலில் இருந்து லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இணையதளங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் பெருநிறுவனங்களில் இதன் தாக்கம் மிக மோசமான அளவில் ஏற்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் பல்வேறு பிரபல செயலிகளிலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். இதனால், உலகெங்கிலும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.


ஷேர்சாட்


பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ஷேர் சாட் பெங்களூருவை மையமாக கொண்டு அமைந்துள்ளது.  ஷேர் சாட் நிறுவனம் மற்றும் அதன் ஷார்ட் வீடியோ தளமான மொஹல்லா டெக் நிறுவனம் அங்கு உள்ளது. ஷேர்சாட் அனைத்து தரப்பு பயனர்களிடையேயும் பிரபலமானது. இது பல இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. குறிப்பாக இது கிராமப்புற மக்களும் எளிதில் இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஷேர் சாட் என்பது share chat, moj, moj lite+ போன்ற  பயன்பாடுகளின் தாய் நிறுவனமாகும்.


பணிநீக்கம்


இந்தியாவில் tiktok தடை செய்யப்பட்ட பின், moj தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஷேர் சாட் நிறுவனத்தில் சுமார் 2,100 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஷேர் சாட் நிறுவனத்தில் 20 சதவீதம் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது 2,100 பணியாற்றி வந்த நிலையில், அதில் 500 முதல் 600 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்த பணிநீக்கம் நடவடிக்கை குறித்து ஷேர் சாட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, ”எங்கள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும துயரமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தொடக்கத்தில் இருந்து எங்களுடன் பணிபுரிந்த 20 சதவீத சிறந்த ஊழியர்களை வேலையில் நீக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.


பணிநீக்க நடவடிக்கை காரணம்


மேலும், நிறுவனத்தின் முதலீடுகள் சந்தையின் வளர்ச்சி சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இந்த பணிநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நிலையற்ற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு பணிநீக்கம் நடவடிக்கையானது எடுக்கப்பட்டதாக ஷேர் சாட் நிறுவனத்தில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் சாட் நிறுவனம் தனது தேவை அளவுக்கு மீறி ஆட்களை பணியமர்த்தியதே இதுபோன்ற பணி நீக்க நடவடிக்கைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


மொஹல்லா நிறுவனத்தின் 2021-2022 நிதியாண்டில் அதன் மொத்த வருவாய் ரூ.80 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில்,  4.3 மடங்கு உயர்ந்து ரூ. 419.2 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஷேர்சாட் விளம்பரங்கள் மூலம் மொஹல்லா டெக் நிறுவன வருவாயில் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. இது ஆண்டுக்கு விளம்பரங்கள் மூலம் மொஹல்லா நிறுவணம் 30% வருவாய் பெரும் என்று கூறப்படுகிறது . கடந்த 2021 நிதியாண்டில் மொஹல்லா டெக்கின் செலவிடப்பட்ட தொகை ரூ.1,557.5 கோடி ஆகும். இதில் செலவிடப்பட்ட தொகையில் இருந்து 119% உயர்ந்து ரூ.3,407.5 கோடியாக வருவாயை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.