நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கமும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள விவசாயிகள் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி தில்லி சலோ என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகின்றனர்.


விவசாயிகள் துரோகிகளா?


விவசாயிகள் டெல்லியின் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி எல்லையில் இரும்புத் தடுப்புகள், இரும்பு வேலிகள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா??


குறைந்தபட்ச, அதிகபட்ச ஆதார விலை உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த பக்தர்களும், விவசாயிகள் விளைவித்த உணவைத் தின்று உயிரோடு இருக்கும் மன்னனின்___ ஊடகங்களும் அதே விவசாயிகளை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?






உணவு கொடுப்பதை நிறுத்துங்கள்:


சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு, தினம் தினம் வார்த்தை மாறும், ஆனால் தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. முழு நாட்டிற்கும் உணவு வழங்கும் அண்ணா தாதாக்கள்..


விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.


தேசவிரோதிகளா?


ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்? நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா?” இவ்வாறு ஆவேசமாக அவர் பதிவிட்டுள்ளார்.


மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு பலரும் தொடர்ந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருவது, இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு சறுக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டெல்லியில் விவசாயிகள் உள்ளே நுழைவதை தடுப்பதற்காக டெல்லி போலீசார் மாநிலத்தின் எல்லைகளில் கடும்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளும் போலீசாரின் தடுப்புகளையும், அவர்களது தாக்குதல்களையும் தடுப்பதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளனர். டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை புதிய இயந்திரங்களாக மாற்றி டெல்லியில் குவிந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Farmers Protest: வலுக்கும் போராட்டம்.. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு.. 5வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..


மேலும் படிக்க: Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு