சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சண்டிகர் மேயர் தேர்தல்:


ஜனவரி மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட,  குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் மனோஜ்  சோன்கருக்கு 15 வாக்குகள் கிடைத்தன. அகாலி தளத்துக்கு 1 வாக்கு கிடைத்தது.


இருப்பினும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதனால், மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


”பாஜக வெற்றி செல்லாது”:


இது பெரும் சர்ச்சையான நிலையில், தேர்தல் அதிகாரியே வாக்குச் சீட்டுகளில் பேனாவை கொண்டு எதையோ கிறுக்குவதை போன்ற வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 


இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வந்த வழக்கில், சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  தேர்தல் நடத்தும் அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறி தவறு செய்திருக்கிறார். வேண்டும் என்றே 8 வாக்குகள் செல்லாது என அறிவித்திருக்கிறார். வாக்குகள் செல்லாது என்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


ஆம் ஆத்மி வெற்றி:






இதையடுத்து, சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்றும், தேர்தலை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும்  நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து,  ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு  அளித்தது.




இந்த தீர்ப்பையடுத்து, குல்தீப் குமார் தனது வெற்றியை இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.