Farmers Protest : வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய போராட்டக்காரர்கள் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லைக்கு வந்துள்ளது. போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஹரியானா காவல் துறையினர் விவசாயிகளை நோக்கி மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீசினர். இதனால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. தொடர்ந்து போராட்டம் வலுபெறும் நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா 5 வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஹரியானா எஸ்.பி கூறுகையில், “அனைத்து டி.எஸ்.பி.க்களும் பணியில் உள்ளனர். எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்தைப் பொறுத்தவரை, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாளில் நாங்கள் தொடர்ந்து இடுகையிடும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.