மும்பையில் ஜிகா வைரஸால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மும்பையில் உள்ள புறநகர் குர்லாவைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. இந்த சிறுமிக்கு காய்ச்சல் மற்றும் தலைவலி இருப்பதாக கூறி ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி 79 வயது முதியவர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக கூறி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. 2021 ஆம் ஆண்டில், கேரளாவைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டில், மகாராஷ்டிராவின் பெல்சார் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில், தலசரியில் உள்ள ஒரு அரசு குடியிருப்புப் பள்ளியில் படித்த 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இந்த நோயின் தாக்கம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது.
ஜிகா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால் ஒரு சிலருக்கு காய்ச்சல், அழற்சி, மூட்டு வலி மற்றும் கான்ஜுன்க்டிவிடிஸ் (சிவப்பு கண்கள்) ஆகியவை தென்படலாம். பல பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமல் இருக்கலாம், ஏனெனில் அறிகுறிகள் மற்ற பொதுவான நோய்களுக்கு ஏற்படுவது போலவே இருக்கும். இருப்பினும், பிறந்த குழந்தைகளில், குறிப்பாக மைக்ரோசெபாலி என்ற (சிறிய தலை) பிறப்பு குறைபாடுக்கு வைரஸின் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.