ஆசியான் மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரலிலும், இந்தியாவிற்கு பதிலாக பாரத் என குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் இந்தோனேசியா பயணம்:


அடுத்த வாரம் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என மொத்த 40 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியான் மற்றும் 18 வது கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றி பங்கேற்க பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார். இன்று இரவு டெல்லியில் இருந்து அவர் இந்தோனேசியா புறப்பட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.  பின்னர் மறுநாளே டெல்லி திரும்புவார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநாட்டின் நோக்கம் என்ன?


மாநாட்டில் கடலோர பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட ஆசியான் கூட்டமைப்பின் 10 உறுப்பு நாடுகளுடன் விவாதம் நடத்த சிறப்பு அழைப்பாளர்களாக ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, ரஷ்யா, மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் கூட இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.


மீண்டும் வெடித்த பாரத் சர்ச்சை..!


இந்நிலையில் வெளியாகியுள்ள, மாநாட்டிற்கான பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் தான், பாரத் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பாஜக தரப்பில் பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கத்திற்கு மாறாக 'பாரதப் பிரதமர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகளும் இருந்தாலும், இதுவரை  இந்திய குடியரசு தலைவர், இந்தியா பிரதமர் என்று தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.


மேலும் படிக்க: Vishnu Vishal on Bharat: இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமையை தரலையா? சேவாக்கை க்ளீன் போல்டாக்கிய விஷ்ணு விஷால்!


ஆரம்பித்த குடியரசு தலைவர் மாளிகை:


ஏற்கனவே, குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் பாரத பிரதமர் எனப் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. இந்நிலையில், பாஜக வெளியிட்ட பிரதமரின் நிகழ்ச்சி நிரலிலும் இந்தியா தவிர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் மற்றும் இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவது தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.