வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13ஆவது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261ஆவது அமர்வு) செப்டம்பர் 18 முதல் 22 வரை, 5 அமர்வுகளைக் கொண்டதாகக் கூட்டப்படுகிறது. 


நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்:


நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கு காத்திருக்கிறோம்" என எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. 


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை இயற்ற வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. அதேபோல,
பெண்கள் இட ஒதுக்கீடு, ஒரே நாடு ஒரே தேர்தல், 'இந்தியா' பெயர் மாற்றம் ஆகியவை தொடர்பாகவும் சட்டம் இயற்றப்படலாம் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


ஆனால், இவை எதுவுமே உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும் சிறப்புக் கூட்டத் தொடர், செப்டம்பர் 19ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


என்ன செய்யபோகிறது மத்திய பாஜக அரசு?


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. மக்களவை, மாநிலங்களவை செயலகங்கள் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தது.


பட்ஜெட், மழைக் காலம், குளிா்கால கூட்டத் தொடா் என நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஆண்டுக்கு மூன்று முறை கூடும். ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக சிறப்புக் கூட்டத் தொடா் கூட்டப்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.


கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்கின.


ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்தது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போனது. வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறினர்.


இதனால், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக, எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர, பிரதமரின் பதிலோடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.