திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும், உலக பணக்கார கடவுள்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு நாள்தோறும் உலகம் முழுவதும் இருந்து வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களின் வசதிக்காக விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனம் என பலவகையான ஏற்பாடுகளை செய்துள்ளது. 24 மணி நேரமும் தரிசனம் என்ற வகையில் சுழற்சி முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காகவும், லட்டு வழங்கும் மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே திருப்பதியில் சிறப்பு கட்டணம் , விஐபிகளுக்கான டிக்கெட்டுகள், பல்வேறு சிறப்பு பூஜைகளில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட்டுகளும் அதற்கு முந்தைய மாத கடைசியில் தேவஸ்தானத்தால் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் நடைபாதை வழியாக மலையேறுபவர்கள் விரைந்து தரிசனம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆனாலும் விடுமுறை நாட்களில் குறைந்தது 12 மணி நேரமாவது சாமி தரிசனம் செய்ய தேவைப்படுகிறது என்பதால் பக்தர்கள் விழிபிதுங்குகின்றனர்.
இனி எளிதாக தரிசனம் காணலாம்
இந்நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, திருப்பதிக்கு வரும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அனுமனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ என எழுதுவது போல, ‘கோவிந்தா கோவிந்தா’ என ஒரு கோடு முறை எழுதி வந்தால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் 10,01,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு மட்டும் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களி 2 புரட்டாசி பிரமோற்சவம் வருகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீண்டும் பணமதிப்பிழப்பு? பறிபோகும் அடையாளம்? இந்தியா பெயரை மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும்?