கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்கின.
இதனால், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக, எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர, பிரதமரின் பதிலோடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் அல்லது எந்த உறுப்பினரும் பிரச்சினைகளை எழுப்ப முடியாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தெரிவித்தது. மேலும், கேள்வி நேரமின்றி நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடர், புதிதாக நாடாளுமன்ற கட்டிடத்தின் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதால், நடப்பு மக்களவை கடைசி கூட்டத்தொடராக இந்த சிறப்பு கூட்டத்தொடர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் வியூக கூட்டம் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர். மேலும் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ” மக்கள் அக்கறை கொண்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். அந்த பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதும், இந்த உணர்வுடன் இந்த சிறப்பு அமர்வில் பங்கேற்க வேண்டும் என்பதும் தான் எங்களின் கோரிக்கை” என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் புகழாரம் மட்டும் கேட்கப்போவது இல்லை, இந்த கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சனைகள் குறித்தி நிச்சயம் கேள்வி எழுப்புவோம் என கூறியுள்ளார்.
நேற்று அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பான மல்லிகார்ஜுன் கார்கே பதிவில், “ சிறப்பு கூட்டத்தொடர் பற்றி எதிர்க்கட்சிகளிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இப்படி எதையாவது ஒன்றை அறிவித்து மக்களின் பிரச்சனையை திசை திருப்புவதே பாஜகவின் நோக்கம். மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் நாங்கள் தயங்க மாட்டோம், இவற்றில் கவனம் செலுத்தவே விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தில் பொதுவாக மூன்று நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும். அது, பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்கால அமர்வுகள் ஆகும். இந்தநிலையில், இந்த சிறப்பு கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகிவரும் நிலையில், இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.