சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.
தினமும் வேன் மூலம் பள்ளிக்கு சிறுமி சென்று வந்த நிலையில், கடந்த 20ம் தேதி பள்ளி விட்டு வீட்டுக்கு அழுதுபடி வந்துள்ளார்.
தொடர்ந்து அழுதபடியே அவர் வந்த நிலையில் கவலையில் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர், யாரோ அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நேராக பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சிறுமியை அழைத்துச் சென்று பள்ளி ஆசிரியர்கள் உள்பட அனைவரது புகைப்படங்களையும் காண்பித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிறுமியை தினசரி வேனில் கூட்டிச் செல்லும் வேன் உதவியாளர் சத்யராஜ் என்பவர் தான் குற்றத்தில் ஈடுபட்டவர் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பள்ளி வேன் உதவியாளர் சத்யராஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போக்சோ சட்டம் :
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றன.
- 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது).