சென்னையை அடுத்த புளியந்தோப்பில் தம்பியை வெட்டிக்கொன்ற நபரை 9 ஆண்டுக்கு பிறகு பழிதீர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையை அடுத்த புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் 33 வயதான கார்த்திகேயன் (எ) சேட்டு. இவர் மீது 2 கொலை உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே அமர்ந்து, தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5 பேர், கார்த்திகேயனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.


இதுகுறித்து, புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், பேசின் பிரிட்ஜ் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யானைகவுனி பகுதியைச் சேர்ந்த 40 வயதான பிரேம்குமார் முன்விரோத தகராறில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கார்த்திகேயனை கொலை செய்தது தெரியவந்தது. 


பழிக்கு பழி: 


இதையடுத்து, முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் பேசின்பிரிட்ஜ் காவல்துறையினர்  கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளியான பிரேம்குமார் அளித்த வாக்குமூலமாக காவல்துறையினர் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எனது தம்பி ரஞ்சித்தை ஏரியா பிரச்சினையில் கார்த்திகேயன் கொலை செய்தார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் பல ஆண்டாக கார்த்திகேயனை பின்தொடர்ந்து கொலை செய்ய திட்டமிட்டேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


கடந்த மார்ச் மாதம் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 15ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன், சம்பவத்தன்று புளியந்தோப்பு நெடுஞ்சாலை காந்திநகர் 6 பேருந்து நிறுத்தம் கார்த்திகேயன் அந்த பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே இருப்பது அறிந்து, கூட்டாளிகளுடன் அங்கு சென்று, வெட்டிக் கொலை செய்தேன் எனத் தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, 5 பேரையும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2013 ம் ஆண்டு புத்தாண்டு  தம்பியை கொன்றவனை 9 ஆண்டுகள் கழித்து அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.