சென்னையில் அமைந்துள்ள மண்ணடி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 15 வயதே ஆன 10ம் வகுப்பு மாணவி நந்தினி என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


வயிற்று வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவி நந்தினி நேற்று திடீரென உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அறிந்த அவரது பெற்றோர்களான ரமேஷ் மற்றும் வசந்தி அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதனர்.




வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நந்தினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்ததால் அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். மேலும், மாணவி நந்தியின் மரணத்திற்கு காரணம் மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையே காரணம் என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வடக்கு கடற்கரை போலீசார் விரைந்து வந்தனர்.  அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த மாணவி நந்தினியின் பெற்றோர்கள் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே தங்களது மகளை இழந்துவிட்டோம் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




உயிரிழந்த மாணவி நந்தினியின் தந்தை ரமேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள எம்.பி.டி. காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ் – வசந்தி தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. அதன்பின்னர், பிறந்த குழந்தையே நந்தினி. இந்த தம்பதியினரின் ஒரே மகளான நந்தினியை அவர்கள் செல்லமாக வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், அவர்களது செல்ல மகள் நந்தினியின் மரணத்தால் அவர்களது குடும்பம் மட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : காஞ்சிபுரம் : தரைப்பாலங்களில் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பால் கிராம மக்கள் அவதி.. கோரிக்கை என்ன?


மேலும் படிக்க : Rain water Drainage : களம் இறங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சி.. மழைநீர் வடிகால் பணிகளை பாராட்டிய அதிமுக கவுன்சிலர்.