கடத்தப்பட்ட சிறுமி

 

சென்னை அடுத்த சிட்லபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட, செம்பாக்கம், திருமலை நகர் , முதல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வினோத். இவர் ஓஎம்ஆர் இல் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 4½ வயது பெண் குழந்தை வர்ஷா, இன்று மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியுடன் இரண்டு ஆண் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியையும் மட்டும் ஏற்றிக் கொண்டு, சிறுவர்களை விட்டு விட்டு சென்றுவிட்டார். பிறகு வர்ஷாவை காணாததால் இதுகுறித்து அங்கு இருந்த சிறுவர்களிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்பொழுது அங்கு உடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், இதுகுறித்து வினோத்திடம் தகவல் அளித்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட வினோத் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார்.



 

இதனை அடுத்து சிறுமியின் தந்தை வினோத் சிட்லபாக்கம் காவல்  புகார் அளித்தார். மேலும் வர்ஷாவுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரிடமும் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையே துவங்கினர். சிறுவர்களும் சரியான அடையாளம் கூறியதால் , உடனடியாக அந்த அடையாளத்தை வைத்து சோதனையை தீவிர படுத்தினர்.

 

உஷாரான காவல்துறை..

 

புகாரின் பேரில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்கள் தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட அறிவுறுத்தினார். அதனடிப்படையில் சிட்லபாக்கம், குரோம்பேட்டை, பள்ளிகரணை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து போலீசார் ஆகியோர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடி வந்தனர். சேலையூர், கேம்ப் ரோடு, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

 



 

 

சிசிடிவியை கண்காணித்த போலீஸ்

 

காவல்துறையினர் சிறுமி கடத்தப்பட்ட இடத்திலிருந்து, எங்கெல்லாம் செல்ல முடியுமோ அந்த வழிகளில் இருக்கும், தனியாருக்கு சொந்தமான மற்றும் காவல் துறைக்கு சொந்தமான சிசிடிவி காட்சிகளை , உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஒரு மணி நேரமாக உட்புற சாலைகளில் ஆட்டோவில் சிறுமியை வைத்து, சுற்றி வந்த மர்ம நபர் இரண்டு இடங்களில் சிசிடிவியில் சிக்கியுள்ளார்.

 

சுற்றி வளைத்த காவல்துறை

 

அதன் பிறகு குரோம்பேட்டை எம்.ஐ.டி.மேம்பாலம் அருகே சிறுமியை கடத்திக் கொண்டு சென்ற போது போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமைகாவலர் ஜலேந்திரன், முதல் நிலை காவலர் முத்துகுமார் ஆகியோர் மடக்கி பிடித்து சிறுமியின் புகைப்படத்தை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உறுதி செய்த பின்னர் போலீசார் சம்பவ இடம் சென்று கடத்திய நபரை கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.  சிறுமியை மீட்டு வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். 



கைது செய்யப்பட்ட நபரிடம் பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நேரில் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர் குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சம்சுதீன்(34), என்பதும் அவர் சிட்லபாக்கம் காவல் நிலைய சி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. மேலும் சிறுமியை கடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் சரியாக தேடுவதற்கு வசதியாக , வர்ஷாவுடன் விளையாடி இருந்த சிறுவர்கள் இருவரும், சரியாக அடையாளம் கூறியதால் சீக்கிரம் பிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், அந்த சிறுவர்களுக்கு காவல்துறையினர் இனிப்புகள் வழங்கி, பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

 

காவல்துறையினர் தெரிவிக்கையில்..

 

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா சிறுமி 5.15 மணியளவில் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக கமிஷனர் அவர்கள் தாம்பரம் மற்றும் சென்னை காவல் எல்லைகளை உஷார் படுத்தி, இரண்டு இடங்களில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தேடி வந்த நிலையில் எம்.ஐ.டி.பாலம் அருகே போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து மீட்கபட்டதாகவும், கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிறுமி மீட்கப்பட்டதாக கூறினார். கடத்தலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடப்பதாக தெரிவித்தார்.



 

வயர்லெஸ் மூலம் வந்த தகவல்..

 

மேலும் இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், நாங்கள் நகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் இருந்த பொழுது எங்களுடைய வயர்லெஸ் மூலமாக, ஆட்டோ எங்கெங்கே செல்கிறது என்பது குறித்த தகவல் உடனடியாக கொடுக்கப்பட்டது. சிசிடிவி ஆட்டோ சிக்கியதில் இருந்து தொடர்ந்து அந்த ஆட்டோவை பல்வேறு கோணங்களில் கண்காணித்து, களத்தில் இருந்த காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் விரைவாக பிடிக்க முடிந்தது என தெரிவித்தார். சிறப்பாக, செயல்பட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.